“அதிமுக கவுன்சிலர்கள் கட்சி மாறினால் வீடு புகுந்து வெட்டுவேன். என் வெட்டுதான் முதல் வெட்டாக இருக்கும். கட்சி மாறுகிறவன் போஸ்ட்-மார்ட்டம் அரசு மருத்துவமனையில்தான் நடக்கும்.” என்று சாத்தூர் நகர்மன்ற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிமுக ஒன்றிய செயலாளர் சண்முகக்கனியின் மீது சாத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக அவரை போலீசார் கைது செய்ய நெருங்கும்போது, அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக வீட்டு மாடியிலிருந்து குதித்தார். இதில் அவருக்கு குதிகாலில் முறிவு ஏற்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
‘குணமாகி வரட்டும்; கைது நடவடிக்கையைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்..’ என்று காவல்துறை சண்முகக்கனி மீது கரிசனம் காட்டிய நிலையில், ‘கட்சி மேடையில் என்ன பேச்சு பேசினாரு சண்முகக்கனி. சாதிகளைக் குறிப்பிட்டெல்லாம் கட்சி நிர்வாகிகளைக் தகாத வார்த்தையில் திட்டினாரு. ஊரில் மதிக்கத்தக்க நிலையில் உள்ளவர்களைக்கூட ‘பிச்சைக்கார குடும்பம்’ என தரம் தாழ்ந்து விமர்சித்தாரு. அவருக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்..’ என்று அவர் சிகிச்சை பெறும் சிசிடிவி பதிவை ‘வைரல்’ ஆக்கிவருகின்றனர் அதிமுக கிழக்கு மா.செ. ரவிச்சந்திரனுக்கு ஆகாத எதிர்க் கோஷ்டியினர்.
அதிமுக நிர்வாகி ஒருவர் நம்மிடம், “சண்முகக்கனியின் அப்பா சுந்தரபாண்டியன், வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு அரசியலில் முன்னுக்கு வந்தவர். ஆரம்பத்தில் லோடுமேன் வேலை பார்த்தவர். அதிமுக மாவட்ட செயலாளர் ஆகும்வரையிலும் தீப்பெட்டி ஆபீஸில் போர்மென் வேலை பார்த்தார். இதையெல்லாம் மறந்துவிட்டுத்தான், கட்சி நிர்வாகிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் சண்முகக்கனி இழிவாகப் பேசினார். ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றிப்பெற முடியாத அவர், காலம் கற்றுக்கொடுத்த பாடத்தை சரியாகப் புரிந்துகொண்டு இனியாவது திருந்தி நடக்கவேண்டும்.” என்று வேதனையைப் பகிர்ந்துகொண்டார்.
தன்னை மாவீரனாகச் சித்தரிக்க முயன்று ‘காமெடி பீஸ்’ ஆகிவிட்டார் சண்முகக்கனி!