வேலூர் டு காட்பாடி இடையே காட்பாடி ரயில்வே நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாதை ஆந்திரா மாநிலத்திற்குச் செல்லும் முக்கிய பாதையாகும். தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்து திருப்பதி செல்லும் பாதையும் இதுதான்.
50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ரயில்வே மேம்பாலம் தற்பொழுது பழுதடைந்து உள்ளது. அதை சீரமைக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே காட்பாடி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் அதற்கு நிதி ஒதுக்கப்பட்டு சீர் செய்யப்பட்டது. இருந்தும் அந்தப் பாதை மிக மோசமான நிலையிலேயே இருந்து வந்தது. இந்நிலையில் அந்த மேம்பாலத்தைச் சீர்படுத்த வேண்டும் என அந்த கோரிக்கையை அடுத்து வேலூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, ரயில்வே நிர்வாகம் இணைந்து அந்த மேம்பாலத்தைச் சீர் செய்திடும் பணியில் ஈடுபட்டது.
இதற்காக கடந்த 10 தினங்களுக்கு மேலாக அந்த ரயில்வே மேம்பாலம் செல்லும் வாகனங்கள் பாதை மாற்றி விடப்பட்டன. தற்பொழுது அது ஓரளவு பணி முடிந்த நிலையில் ஜூன் 29 ஆம் தேதி மேம்பாலத்தின் தாங்கும் திறனை சோதனை செய்தனர். அதில் திருப்தி ஏற்பட்டதும் முதல் கட்டமாக ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தை அனுமதிக்கலாம் எனத் திட்டமிட்டனர். இதை வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் அறிக்கையாக வெளியிட்டார்.
இந்நிலையில் ஜூலை ஒன்றாம் தேதி காலை 10 மணி அளவில் அதிமுக வேலூர் மாநகர மாவட்டச் செயலாளர் அப்பு, தன் கட்சியினருடன் சென்று அந்த மேம்பாலத்தில் ரிப்பன் கட்டி திறப்பு விழா செய்தார். அதோடு காட்பாடி தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சருமான துரைமுருகனையும் விமர்சனம் செய்தார். மேம்பாலம் செப்பனிடும் பணியை வேகமாக செய்யவில்லை எனக் குற்றம் சாட்டி பேசினார்.
இது ஆளுங்கட்சியான திமுகவினரை அதிர்ச்சி அடைய செய்தது. இதுதொடர்பாக இன்று மாலை காட்பாடி வருவாய்த்துறை சார்பில், காட்பாடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் மாநகரச் செயலாளர் அப்புவை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்படி அழைத்து வரும் போது தன் காவல் நிலையத்திற்கு வரமாட்டேன் என அப்பு தகராறு செய்துள்ளார். அதனை கண்டு கொள்ளாமல் காவல்துறை அவரை காவல் நிலையம் அழைத்து வந்தது. இந்த தகவல் தெரிந்து அதிமுகவினர் வேலூர் டூ காட்பாடி சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியை பெரும் பரபரப்பில் உள்ளது.