திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார் சத்திரம் யூனியன் கட்டுப்பாட்டில் காமாட்சிபுரம் ஊராட்சி மன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி மன்றத் தலைவராக அ.தி.மு.கவைச் சேர்ந்த கணேஷ் பிரபு பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் அப்பகுதியில் உள்ள பிரபல பாதாள செம்பு முருகன் கோவில் அறக்கட்டளை சார்பாக, எல்லை பட்டி அரசு பள்ளியில் படிக்கக்கூ டிய மாணவ மாணவிகளுக்கு நோட்டுகள் பேனாக்கள் வழங்கப்பட்டது. அப்போது அங்கு படிக்கக்கூடிய எட்டாம் வகுப்பு மாணவிகள் தங்கள் பள்ளியில் கழிவறைகள் பழுதடைந்து உள்ளதாகவும் தங்களுக்கு புதிதாக ஒரு கழிவறை மற்றும் மழைக்காலங்களில் தண்ணீர் பள்ளியில் தேங்கி நிற்பதால் பேவர் பிளாக் கல் அமைத்து தரக்கோரியும் பாதாள செம்பு முருகன் கோவில் அறக்கட்டளை அறங்காவலரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று, மாணவ மாணவிகளின் நலன் கருதியும் உடனடியாக பாதாள செம்பு முருகன் அறக்கட்டளை சார்பாக எல்லப்பட்டி அரசு பள்ளியில் கழிவறை கட்டுவதற்கான பொருட்களை இறக்கி பணிகள் தொடங்குவதற்கு முன் காமாட்சிபுரம் அ.தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர் கணேஷ் பிரபு, எல்லைப்பட்டி பள்ளியின் ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம், ‘யாரைக் கேட்டு பாதாள செம்பு முருகன் கோவில் அறக்கட்டளை அமைப்பை இந்த பணி செய்ய அனுமதித்தீர்கள்’ என வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணியை செய்ய விடாமல் தடுத்துள்ளனர். அதை கேட்ட ஊர் மக்கள், அரசு பள்ளிக்கு நல்லது செய்யக்கூடிய பணியை ஏன் தடுக்கிறீர்கள் என்று கேட்டும் கூட எங்கள் அனுமதி இல்லாமல் இங்கு பணி செய்யக்கூடாது என அரசு ஒப்பந்தக்காரரிடம் தகராறில் ஈடுபட்டு பணியை தடுத்து நிறுத்தி உள்ளார்.
இதையடுத்து, உடனடியாக பணிசெய்யமால் அரசு ஒப்பந்தக்காரர் பணியை விட்டு பாதியிலேயே விலகிச் சென்றார். அதோடு பள்ளித் தலைமை ஆசிரியரையும் அ.தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர் கணேஷ் பிரபு மிரட்டி இருக்கிறார். இதனால் கோபமடைந்த மக்கள், ‘நாங்கள் இருக்கிறோம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அந்த கழிப்பறையை கட்டி கொடுங்கள்’ என்று வலியுறுத்தியதின் பேரில் பாதாள செம்பு முருகன் அறக்கட்டளை சார்பில் காண்டராக்ட்காரர்கள் மூலமாக மீண்டும் பணி துவங்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகள் வளர்ச்சியடைய ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள் அறக்கட்டளை என பல்வேறு தரப்பிலும் அரசு பள்ளியில் தரம் உயர்த்துவதற்காக பல்வேறு சேவைகளை செய்து வரும் நிலையில் எல்லைபட்டி அரசு பள்ளியில் மாணவிகளின் கோரிக்கையான கழிவறை கட்ட விடாமலும் பேவர் பிளாக் கல் போட விடாமல் செய்த ஊராட்சி மன்ற அ.தி.மு.க தலைவர் மீது அப்பகுதி மக்களும், மாணவ மாணவிகளின் பெற்றோர்களும், அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.