வலங்கைமான் அருகே முன்விரோதத்தால் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட வேப்பந்தகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பன். இவரது மகன் பன்னீர்செல்வம்(55). இவர் அதிமுக அரையூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருகிறார். இவரது அண்ணன் மகன் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரது மகளை நீண்டகாலமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவருக்குமான காதல் விவகாரத்தை இருதரப்பு வீட்டாரும் கண்டித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில், நீடாமங்கலம் அருகே கொட்டையூர் என்கிற பகுதி வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பன்னீர்செல்வத்தை வழிமறித்த மர்ம நபர்கள் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் கொலை வெறியுடன் தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குத்தி சாய்த்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய பன்னீர்செல்வத்தின் அலறல் சத்தத்தைக் கேட்ட அப்பகுதியினர் அவரை சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொலை முன்விரோதத்தால் நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என்கிற கோணத்தில் வலங்கைமான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், சங்கர் என்பவரது மகன் விஜயனைக் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த ஊராட்சி தலைவர் பன்னீர்செல்வத்தின் மனைவி மனோமணி கூறுகையில், “தனது கணவர் எந்தப் பிரச்சனைக்கும் போகமாட்டார். அவருடைய அண்ணன் மகன் பிரச்சனையில் பஞ்சாயத்து பேசியதாகக் கூறி சங்கர் மகன் விஜயன் அவரது கூட்டாளிகளை அழைத்து வந்து வீட்டிற்கு அருகில் மது குடித்துவிட்டு தவறாகப் பேசி கொலை செய்துவிடுவேன் எனத் தொடர்ந்து மிரட்டினார். சொன்னது மாதிரியே எனது கணவரை கொலை செய்துட்டாங்க. அவரை விஜயன் மட்டும் கொலை செய்யவில்லை. அவருடைய கூட்டாளிகளுடன் சேர்ந்துதான் கொலை செய்திருக்கிறார்” என்றார்.