‘நெஞ்சில் நஞ்சும், வாயில் வன்மமும் கொண்டவர், கே.டி.ராஜேந்திரபாலாஜி. மதரீதியாக மக்களைத் துண்டாடத் துணிகிறார். அமைச்சர் பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டும்.’ என்று ட்விட்டரில் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு வேண்டுகோள் விடுக்க, ‘உனக்கு வந்தா ரத்தம்; எனக்கு வந்தா தக்காளி சட்டினியா?’ என்று கே.டி.ராஜேந்திரபாலாஜியின் நட்பு வட்டம் ‘கமென்ட்’ அடித்து, தற்போது எதிர்வினை ஆற்றிவருகிறது.
கே.டி.ராஜேந்திரபாலாஜியின் எண்ண ஓட்டத்தை அறிந்திருக்கும் அவர்கள் “அப்படி வாங்க வழிக்கு..” என ஸ்டாலினின் ட்வீட்டுக்கு பதிலடி தருகிறார்கள். “இந்துக்களின் ஓட்டு இனிக்கிறது; உயிர் கசக்கிறது! என்று கே.டி.ராஜேந்திரபாலாஜி சொன்னவுடன், இந்துக்களின் வாக்கு வங்கியை அல்லவா திசை திருப்பிவிடப் பார்க்கிறார் அமைச்சர்? என்ற பயம் வந்துவிட்டது. உடனே, மதச்சார்பின்மைக்கு எதிராக அமைச்சர் பேசுகிறார் என்று கொதிக்கிறார் ஸ்டாலின். எது மதச்சார்பின்மை? சிறுபான்மையினர் ஓட்டுக்களைச் சிந்தாமல் சிதறாமல் மொத்தமாகக் கவர்வதற்காகவே, மதச்சார்பின்மை என்ற ஆயுதத்தை எப்போதும் கையில் எடுக்கிறது திமுக. இந்த விஷயத்தில், தாங்கள் நினைத்ததை திமுகவால் சாதிக்கவும் முடிந்திருக்கிறது. மதச்சார்பின்மை பேசிவரும் பலனை, ஒவ்வொரு தேர்தலிலும், திமுக அறுவடை செய்யத் தவறுவதில்லை. அதனால், சிறுபான்மையினரில் ஒரு பிரிவினரின் வாக்குகள் தற்போது சுத்தமாக அதிமுகவுக்கு விழாமல் போய்விட்டது. அந்த ஆத்திரம்தான் அமைச்சருக்கு.
‘சிறுபான்மையினர் அனைவரையும் சகோதரர்களாகத்தானே பார்த்து வந்தோம். பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற ஒரே காரணத்துக்காக, ஒட்டுமொத்தமாக நம்மை (அதிமுக) வெறுப்பது எந்த விதத்தில் நியாயம்?’ என்பதே அமைச்சரின் ஆதங்கம். ‘சரி, நீங்கள் வெறுக்கின்றீர்களா? நாங்களும் வெறுக்கிறோம்’ என்ற நிலை எடுத்துவிட்டார். சிறுபான்மையினர் வாக்குகளைத் திமுக தனதாக்கிக் கொள்ளும்போது, அதிமுக ஏன் மெஜாரிட்டி இந்து வாக்குகளைக் கவரக்கூடாது? இந்து மதக்கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரான நிலையிலுள்ள திமுகவுக்கு, இந்துக்களின் வாக்குகளை விழாமல் செய்துவிட்டாலே போதும். திமுக எப்படி கொள்கை பேசி, அதிமுகவுக்கு சிறுபான்மையினரில் ஒரு பிரிவினரின் வாக்குகளை விழாமல் செய்ததோ, அதே பாணியில், இந்துக்களின் வாக்குகளை நம் பக்கம் திருப்பி பதிலடி தருவோம் என்பதில் அமைச்சர் தெளிவாக இருக்கிறார்.
அனிதா யார்? நீட் தேர்வால் மருத்துவப் படிப்பை இழந்து தற்கொலை செய்து கொண்டவர். அந்த துயரச் சம்பவம் நடந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இன்று வரையிலும் குரல் கொடுத்து வருகிறது திமுக. அதே நேரத்தில், இங்கே சிவகாசியில் 8 வயதுச் சிறுமி ஒருத்தி, சிறுபான்மையினரில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவனால் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டிருக்கிறாள். தற்கொலை செய்துகொண்ட அனிதாவுக்காக குரல் கொடுத்துவரும் திமுகவோ, மு.க.ஸ்டாலினோ, கொலை செய்யப்பட்ட சிறுமிக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. காரணம் – இச்சம்பவத்தைக் கண்டித்து சிறுபான்மையினரைப் பகைத்துக்கொள்ளக்கூடாது என்ற ஓட்டு கணக்குதான்.
அமைச்சரின் கணைக்கையும் சொல்கிறோம். ‘சிவகாசி தொகுதியில் சுமார் 2,60,000 ஓட்டுகள் உண்டு. மொத்த வாக்காளர்களில், சிறுபான்மையினரில் அந்த ஒரு பிரிவினரின் வாக்குகள் சுமார் எட்டாயிரம்தான். இன்னொரு பிரிவினரின் வாக்குகள் அதிகபட்சமாக 20,000-க்கு மேல் இருக்காது. எப்படி பார்த்தாலும், இந்துக்களின் வாக்குகள் 2 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கிறது. சிவகாசியில் மாரியம்மன், பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாக்களின்போது, காப்பு கட்டுபவர்கள், கயிறு குத்துபவர்கள், தீச்சட்டி எடுப்பவர்கள் என இந்துமத நம்பிக்கையில் உறுதியாக இருப்பவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது. தெய்வ நம்பிக்கை உள்ள நாம், அந்த மக்களின் ஆதரவைப் பெற்று, சிறுபான்மையினர் போல், இந்து மக்களையும் ஒற்றுமையோடு ஒரே கட்சிக்கு (அதிமுக) வாக்களிக்கச் செய்துவிட்டால் போதும். தேர்தலின்போது சிறுபான்மையினர் நடந்துகொள்வதுபோல், இந்துக்களையும் மத ரீதியாக சிந்திக்க வைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். சிவகாசியில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இதை நடத்திக்காட்டி விட்டால், திமுக இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்.’ என்று உள்ளுக்குள் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார் அமைச்சர்.
பெரியார், அண்ணா காலத்தில் இந்துக்களுக்கு எதிராக கடுமையான அடக்குமுறைகள் இருந்தன. கோவிலுக்குள் நுழையமுடியாத கொடுமை நடந்தது. அந்தச் சூழ்நிலையில், அந்தத் தலைவர்கள் பேசிவந்த பகுத்தறிவு கருத்துகளுக்கும், சமூக சீர்திருத்த சிந்தனைகளுக்கும் பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. தற்போது, அந்த நிலைமை மாறிவிட்டது. தீண்டாமைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன ஆதிதிராவிடர்கள், அர்ச்சகர்களாகவும், அறங்காவலர்களாகவும் ஆகியிருக்கிறார்கள். சிறுபான்மையினரின் மத நம்பிக்கைக்கு மதிப்பளித்து விமர்சிக்காதவர்கள், இந்துமத நம்பிக்கையை மட்டும் ஏன் கேலி பேசுகிறார்கள்? காலம் மாறிவிட்டது. இனி, கடவுள் இல்லையென்றால் கல்லெறிதான் விழும்.
\
‘பிரச்சனைக்குரிய கருத்துக்களை, அது எவ்வளவு நியாயமான கருத்தாக இருந்தாலும், பொதுவெளியில் வேண்டாம். திரும்பத்திரும்ப, அந்த நியாயத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தால் பிரச்சனைகள்தான் எழும்.’ என்று அமைச்சர்களின் வாய்க்கு தற்போது கடிவாளம் போட்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
இந்திய அரசியலமைப்பு சட்டம் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கும் தெரியும். 1976-ல் கொண்டு வந்த திருத்தத்தில், பொதுவுடைமை, மதச்சார்பின்மை, நேர்மை ஆகியவையே தேசத்தின் கொள்கைகளாக அறிவிக்கப்பட்டன. இந்தக் கொள்கைகளில், ஆட்சியின்போதும், ஆட்சியில் இல்லாத இந்தக் காலக்கட்டத்திலும் பொதுவுடைமைக்கும், நேர்மைக்கும் எந்த அளவுக்கு திமுக மதிப்பளித்து வந்திருக்கிறது? தொடர்ந்து, குடும்ப அரசியலில் ஈடுபட்டு வரும் திமுக, சிறுபான்மையினர் ஆதரவு நிலை மட்டும் எடுத்து, இந்துக்களுக்கு எதிராக நடந்துகொள்வது எப்படி மதச்சார்பின்மை ஆகும்?
‘நீங்கள் (திமுக) சிறுபான்மையினருக்காகக் குரல் கொடுத்தால், நாங்கள் (அதிமுக) மெஜாரிட்டி இந்துக்கள் பக்கம் நிற்போம்.!’ என்ற நிலைப்பாட்டினைதான் கே.டி.ராஜேந்திரபாலாஜி எடுத்திருக்கிறார்.
மதரீதியாக தேர்தலுக்குத் தேர்தல் மக்களைத் துண்டாடுவது திமுகவா? அதிமுகவா? கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது ட்விட்டரில் குற்றம் சாட்டும் மு.க.ஸ்டாலினின் மனசாட்சிக்கே இந்தக் கேள்வியை விட்டுவிடுகிறோம்.” என்று ‘கே.டி.ராஜேந்திரபாலாஜியின் வாய்ஸ்’ ஆகவே, இக்குமுறலை வெளிப்படுத்தினர்.
அடேங்கப்பா, எல்லாமே ஓட்டு அரசியல்தானா?