ADMK government has failed to protect tribal women says Judge in Vachathi case

பழங்குடியின பெண்களைப் பாதுகாக்க அப்போதைய அதிமுக அரசு தவறிவிட்டதாக வாச்சாத்தி வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிதெரிவித்துள்ளார்.

Advertisment

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக் கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த 1992 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது வாச்சாத்தி மலைக் கிராமத்தில் உள்ள 18 இளம்பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு 4 இந்திய வனப் பணியைச் (IFS) சேர்ந்த அதிகாரிகள் உட்பட 269 பேர் மீது பல பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisment

19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் விசாரணை நடந்த காலகட்டத்திலேயே வழக்கில் சம்பந்தப்பட்ட 54 பேர் இறந்தனர். மீதமுள்ள 215 பேருக்கு ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை விசாரணை நீதிமன்றம் 2011 ஆம் ஆண்டு தண்டனை வழங்கி இருந்தது. இதில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்பட்டது. தண்டனை பெற்றவர்கள், தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன், கடந்த மார்ச் 4 ஆம் தேதி வாச்சாத்தி மலைக் கிராமத்திற்கு நேரில் சென்றும் விசாரணை செய்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதி ஒத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில் வாச்சாத்தி மலைக்கிராம மக்கள் மீதான வன்கொடுமை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று 29 ஆம் தேதி (29.09.2023) தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் கொடுத்த தண்டனையை உறுதி செய்த நீதிபதி வேல்முருகன், மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தார். வாச்சாத்தியில் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் அவர்களின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் அல்லது தனியார், சுய வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்ய வேண்டும். வாச்சாத்தி நிகழ்வின் போது அப்போதைய எஸ்.பி, ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் புரிந்தவர்களிடம் இருந்து தலா 5 லட்சம் ரூபாய் வசூலிக்க வேண்டும்' என நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.

 ADMK government has failed to protect tribal women says Judge in Vachathi case

அதே சமயம் வாச்சாத்தி மலைக்கிராம மக்கள் மீதான வன்கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அளித்த தீர்ப்பில், “தவறு செய்த அரசு அதிகாரிகளை அப்போதைய அதிமுக அரசு காப்பாற்றியுள்ளது. அன்றைய தருமபுரி மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறை அதிகாரிகள் சந்தன மரங்களை வெட்டி கடத்திய உண்மையான கடத்தல்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தவறு செய்த வனத்துறை அதிகாரிகள் மீது எந்தவொரு பயனுள்ள நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாச்சாத்தி சம்பவத்தில் பழங்குடியின பெண்களைப் பாதுகாக்க அப்போதைய அதிமுக அரசு தவறிவிட்டது” எனத்தீர்ப்பில் பதிவு செய்துள்ளார்.