அ.தி.மு.க. பொதுக்குழுவை அங்கீகாரத்ததை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வரும் செப்டம்பர் 30- ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
கடந்த ஜூலை 11- ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 17- ஆம் தேதி அன்று தீர்ப்பளித்தது.
அதில், ஜூலை 11- ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23- ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழு செல்லும் என கடந்த செப்டம்பர் 5- ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் செப்டம்பர் 30- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதே வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.