ஒரே நாளில் திமுகவுடனும், அதிமுகவுடன் தேமுதிக பேசியதாக செய்திகள் வெளியானது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திமுகவின் செந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் மு.ஞானமூர்த்தி நக்கீரன் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில்,
தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. ஜெயலலிதா ஆட்சி அமைத்தார். விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். சட்டசபையில் விஜயகாந்த் அதிமுகவை விமர்சனம் செய்ததால் தனது கட்சி எம்எல்ஏக்களை விட்டு எதிர்த்து பேசச் சொன்னார் ஜெயலலிதா.
சட்டமன்றத்தில் விஜயகாந்த் நாக்கை கடித்து பேசியதால் அவரை சஸ்பெண்ட் செய்து எதிர்கட்சி தலைவர் தகுதியையும் பறித்தார் ஜெயலலிதா. அந்த தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக சேரவில்லையானால் அவர்களுக்கு ஒரு சீட்டுகூட கிடைத்திருக்காது. எதிர்கட்சி தலைவர் பதவிக்கே தகுதியில்லாதவரோடு கூட்டணி வைத்ததை எண்ணி வெட்கப்படுகிறேன் என்று சட்டமன்றத்திலேயே கூறினார் ஜெயலலிதா.
தேமுதிக கட்சி எம்எல்ஏக்கள் மதுரை மேற்குத்தொகுதி எம்எல்ஏ சுந்தர்ராஜன், பேராவூரணி எம்எல்ஏ நடிகர் அருண்பாண்டியன், நெல்லை தொகுதி எம்எல்ஏ மைக்கேல்ராயப்பன், அப்போதைய எம்எல்ஏவாகவும், தற்போதைய அமைச்சராகவும் உள்ள மாபா. பாண்டியராஜன், மங்களூர் எம்எல்ஏ தமிழழகன் ஆகியோரை பிரித்து தனது கட்சியில் சேர்த்தார் ஜெயலலிதா. மேலும் பலரையும் விஜயகாந்துக்கு எதிராக பேசவைத்தார்.
ஒரு இளம் வயது எம்எல்ஏ விஜயகாந்தை சட்டமன்றத்திலேயே எதிர்த்து பேசியதை ஜெயலலிதா கைதட்டி ரசித்து சிரித்தார். எம்எல்ஏவாக இருந்த அவருக்கு மறுநாளே மாவட்ட செயலாளர் பதவியும், மந்திரி பதவியும் கொடுத்தார்.
தன்னை நம்பி கட்சிக்கு வந்த பலரை எம்எல்ஏ ஆக்கி அழகு பார்த்த விஜயகாந்த், பின்னாளில் அதிமுகவினரின் தூண்டுதலின் பேரில் அவர்களில் சிலர் விஜயகாந்தையே விமர்சனம் செய்து காயப்படுத்தினார்கள். தேமுதிகவிற்கு மக்களிடம் இருந்த செல்வாக்கு குறைய ஆரம்பித்தது.
எம்எல்ஏ ஆக்கி தன்னால் அடையாளம் கட்டப்பட்ட நண்பர்களே தனக்கு எதிரியாகிவிட்டதை எண்ணி எண்ணி மன உளைச்சலுக்கு ஆளானார். பொதுவாழ்க்கையில் எம்ஜிஆர் போல் மிளிரலாம் என்னும் ஆசையில் அரசியலில் குதித்த விஜயகாந்தை பலகீனமடையச் செய்தார் ஜெயலலிதா.
உடல் நலம் பாதிக்கப்படுள்ள விஜயகாந்தை நலம் விசாரிக்க சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விசாரித்து விட்டு வெளியில் வரும்போது தேர்தல் குறித்து பேசினீர்களா? என நிருபர்கள் கேட்டபோது அரசியல் பேச வரவில்லை, நலம் விசாரிக்கத்தான் வந்தேன் என நாகரீகமாக பதிலளித்தார். மறுநாள் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவோ தேர்தல் குறித்தும் பேசினோம் என அப்பட்டமாக ஒரு பொய்யை சொல்லி தனது கட்சிக்கான தேர்தல் ஏலத்தை துவக்கினார். அன்றிலிருந்து திமுக தனது கதவை அடைத்துவிட்டது.
திமுக பொருளாளர் துரைமுருகனிடம் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் தொலைபேசியில் தொடர்புகொண்டு, வருகிறோம் திமுகவில் கூட்டணி வைத்துக்கொள்கிறோம் என்று பேசிவிட்டு கட்சி நிர்வாகிகளையும் துரைமுருகன் வீட்டுக்கு அனுப்பி விட்டு, சுதீஷ் மீனம்பாக்கத்தில் ஓட்டலில் தங்கியுள்ள பிஜெபியை சார்ந்த மத்திய அமைச்சரை சந்தித்து கூட்டணி குறித்து பேச ஓடுவது கேவலமாக இல்லையா!
பிஜெபியும், அதிமுகவும் மாறிமாறி சென்று பேரம் பேசி வருகின்றனர். பணத்திற்கும், 6 தொகுதிக்கும் இசைந்துள்ளார்கள். பிரேமலதாவோ பாமகவுக்கு கொடுத்ததையே எங்களுக்கும் கொடுக்க வேண்டும் என டிமாண்ட் வைத்துள்ளார். தேமுதிக தொண்டர்களோ அதிமுகவுடன் கூட்டணி வைப்பதை விஜயகாந்த் விரும்பமாட்டார் என்கின்றனர். இவ்வாறு கூறியுள்ளார்.