திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம், மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு துணை மேயர், கமிஷனர் சிவசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு அதிமுக உறுப்பினர்கள் ராஜ்மோகன் தலைமையில் கருப்பு உடை அணிந்து வந்தனர். கூட்டம் தொடங்கியதும் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது. அதிமுக மற்றும் பா.ஜ.க உறுப்பினர்கள் பேசுகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள சொத்து வரி உயர்வைக் கைவிட வேண்டும் என்றனர். ஆனால் இதற்கு எவ்வித பதிலும் வராததால் மன்றத்தை புறக்கணிப்பதாக கூறி அதிமுக கவுன்சிலர் 4 பேர் மற்றும் பாஜக கவுன்சிலர் ஒருவரும் வெளிநடப்பு செய்தனர்.
அதன்பின் மாநகராட்சி மேயர் இளமதி பேசும்போது, “மாநகராட்சி சொத்து வரி உயர்வு மூலம் மக்களின் பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படும். தமிழக அரசு நன்றாக ஆராய்ந்து தான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே, இதற்கு உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய திமுக உறுப்பினர்கள், தங்கள் வார்டு பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து தங்களுக்கு எதுவுமே தெரிவிப்பதில்லை என்றும் அதிகாரிகள் வந்து பணிகளை செய்துவிட்டு சென்று விடுவதாகவும் கூறினர். இனிவரும் காலங்களில் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் விவாதத்திற்கு பின் தீர்மானங்கள் சில நிறைவேற்றப்பட்டது.