தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுகளால், அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று (25.09.2023) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியதாகவும், அதேசமயம் கட்சியின் 2 ஆம் கட்ட தலைவர்களில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இவ்வாறு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்து வந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்தநிலையில் பாஜக தரப்பு தொண்டர்களும் அதிமுக தரப்பு தொண்டர்களும் போஸ்டர் யுத்தத்தை தொடங்கியுள்ளனர். அதிமுக தலைமையை விமர்சிக்கக் கூடாது என பாஜகவும், பாஜகவை விமர்சிக்கக் கூடாது என அதிமுவும் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இரு கட்சி தொண்டர்கள் தங்களது கருத்துகளை போஸ்டர் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். அதிமுக தரப்பில் ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டரில் 'நவம்பர் மாதம் தான் தீபாவளி என நினைத்தோம்; ஆனால் பாஜகவை வெளியேற்றி செப்டம்பர் மாதமே தீபாவளியை கொண்டாட செய்த பொதுச்செயலாளர். பாரத பிரதமர் எடப்படியார்' என ஒட்டப்பட்டுள்ளது. அதேபோல் பாஜக தரப்பில்,' போர்க்குணம் கொண்ட காவி படைகள் இருக்க; சனாதனத்தை தாங்கி பிடிக்க மக்கள் இருக்க; புலிபோல் தலைவர்கள் இருக்க; புலிகேசியின் ஆதரவு எதற்கு; போட்றா வெடிய' என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.