இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு தற்போது வரை அதிகமாக இருந்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. பொதுமுடக்கம், தேர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, கோயில்களை விடுமுறை நாட்களில் மூடுவது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகின்ற 31ம் தேதியோடு நிறைவடைய இருக்கிறது.
இந்நிலையில் வரும் 31ம் தேதிக்கு பிறகு எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பது, கூடுதல் தளர்வுகள் அளிக்கலாமா என்பது குறித்து அதிகாரிகளோடு முதல்வர் இன்று காலை ஆலோசனை நடத்த உள்ளார். இதில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் புதிய தளர்வுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் வரும் 1ம் தேதியில் இருந்து பள்ளிகளைத் திறக்க முதல்வருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று தெரிவித்திருந்த நிலையில் அதுகுறித்த அறிவிப்பு வரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.