முன்னாள் முதல்வர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்ட புகாரிலும், பெண் பத்திரிகையாளரை அவமதிக்கும் வகையில் பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்ட புகாரிலும் கிஷோர் கே சாமி என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மீது பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர்.
முன்னாள் முதல்வர்கள் குறித்து அவதூறு கருத்துகள் பதிவிட்ட புகாரில் கிஷோர் கே சாமியைக் காவல்துறையினர் ஏற்கனவே கைதுசெய்த நிலையில், மற்றொரு வழக்கில் அவரை காவல்துறையினர் மீண்டும் கைது செய்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, கைதான கிஷோர் கே சாமியை 14 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஏற்கனவே, கிஷோர் கே சாமி மீது பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துவரும் நிலையில், தற்போது நடிகை ரோகினி கிஷோர் கே சாமி மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னைப் பற்றியும் மறைந்த நடிகர் ரகுவரன் குறித்தும் இழிவான கருத்துக்களை ஃபேஸ்புக்கில் கிஷோர் கே சாமி வெளியிட்டதாக புகார் அளித்துள்ளார்.
சென்னை காவல்துறைக்கு ஆன்லைனில் நடிகை ரோகினி இந்தப் புகாரைக் கொடுத்திருக்கும் நிலையில், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு இந்தப் புகார் சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புகாரிலும் கிஷோர் கே சாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.