தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார் நடிகர் விஷால். இந்த சங்கத்தில் விஷாலுக்கு எதிராக உள்ளவர்கள் நேற்று தியாகராயர் நகரில் உள்ள சங்கத்தின் அலவலகத்திற்கு வந்து, விஷால் இங்கு வர வேண்டும், எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று போராட்டடம் நடத்தினர்.
பொதுக்குழுவை கூட்டவில்லை, வைப்பு நிதியில் முறைகேடு, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, பட வெளியீட்டில் பாரபட்சம், இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு சங்க பொதுக்குழு கூட்டாமல் தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட்டது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள்.
ஏ.எல். அழகப்பன், டி.சிவா, எஸ்.ராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர், நந்தகோபால், மைக்கேல் ராயப்பன், தனஞ்செயன் உள்பட சுமார் 50 பேர் திரண்டனர். அவர்கள் திடீரென்று சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர்.
தியாகராயர் நகரில் உள்ள இந்த அலுவலகத்திற்கு இன்று காலை வரும் விஷால் பூட்டை திறந்து அலுவலகதிற்கு செல்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அலுவலகத்திற்கு முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். விஷால் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், பூட்டை உடைப்பதற்கு அனுமதி மறுத்தனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். சங்க விவகாரங்களில் போலீசார் தலையிட வேண்டாம் என்று போலீசாரிடம் அவர் கூறினார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் போலீசார் தலையிட நேர்ந்தது என்று போலீசார் தெரிவித்தனர். வாக்குவாதம் முற்றியதால் நடிகர் விஷாலை கைது செய்தனர்.