Skip to main content

நடிகர் விஜய்க்கு அபராதம்

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

NN

 

நடிகர் விஜய்க்கு சென்னை போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்துள்ளது தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அண்மையில் நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்தார். சென்னை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள நடிகர் விஜய் காரில் சென்ற நிலையில், அவர் சென்ற காரின் கண்ணாடியில் கருப்பு நிற பிலிம் ஒட்டப்பட்டிருந்தது. அந்தக் காரிலிருந்து நடிகர் விஜய் வெளியே வரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.

 

இதுதொடர்பாக பொதுமக்களில் ஒருவர் போக்குவரத்து காவல்துறையின் சமூக வலைத்தள பக்கத்தில் இது தொடர்பான வீடியோ காட்சியை பதிவிட்டு, 'மோட்டார் வாகனச் சட்டத்தின் அடிப்படையில் ஏன் நடிகர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. நீதிமன்ற உத்தரவை மீறி நடிகர் விஜய் கண்ணாடியில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள காரில் வந்துள்ளார். விஐபிகள் மட்டும் காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்ட மோட்டார் வாகனச் சட்டம் அனுமதிக்குமா?' எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதனடிப்படையில் அவருக்குப் பதிலளிக்கும் வகையில் சென்னை காவல்துறை தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், குறிப்பிட்ட இனோவா காருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு, அபராத ரசீதையும் வெளியிட்டுள்ளது. 'TN 07 CJ 5557' என்ற அந்த வாகனமானது நடிகர் விஜய் பெயரில் இருப்பது தெரிய வந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘இந்த முறை காரில் வருகை; கையில் பிளாஸ்திரி’ - ஜனநாயக கடமையாற்றிய த.வெ.க. தலைவர் விஜய்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
casted his vote at Neelankarai polling station. T.V.K. Leader Vijay

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வீட்டிலிருந்து வந்து சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தனது வீட்டில் இருந்து சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்த நிலையில் தற்போது தனது வீட்டில் இருந்து கார் மூலம் வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையாற்றியுள்ளார்.  சமீபத்தில் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் த.வெ.க. தலைவராக முதல்முறையாக வாக்களித்துள்ளார். காயம் காரணமாக கையில் ப்ளாஸ்திரி ஒட்டியுள்ள நிலையில் தற்போது வாக்கினை செலுத்தியுள்ளார்.முன்னதாக கோட் படப்பிடிப்பிற்காக துபாயில் இருந்த விஜய் இன்று காலை விமானத்தின் மூலம் சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.