தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 11ம் தேதி நடக்கின்ற விழாவில் இந்த பட்டத்தை வழங்குகின்றனர். நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.