Skip to main content

"கஸ்தூரிராஜா கடிதம் ரஜினியை எப்படி கட்டுப்படுத்தும்?" - உயர்நீதிமன்றம் கேள்வி!

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

actor rajinikanth chennai high court

 

தனது கடன் தொகையை நடிகர் ரஜினி திருப்பித் தருவார் என நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா எழுதிய கடிதம், ரஜினியை எப்படிக் கட்டுப்படுத்தும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 

நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா, சினிமா ஃபைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் 65 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இந்தத் தொகையை தான் தரவில்லை என்றால் ரஜினி தருவார் என கஸ்தூரிராஜா, முகுந்த் சந்த் போத்ராவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில், தன்னுடைய பெயரைத் தவறாகப் பயன்படுத்திய கஸ்தூரிராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, ரஜினிகாந்துக்கு உத்தரவிடக்கோரி ஃபைனான்சியர் போத்ரா, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

 

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பெயரைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்தான் வழக்குத் தொடர வேண்டுமே தவிர, நீதிமன்றம் உத்தரவிட முடியாது என மனுவைத் தள்ளுபடி செய்துஉத்தரவிட்டார். இந்த வழக்கு, விளம்பரத்திற்காகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். 

 

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, முகுந்த் சந்த் போத்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் மறைந்து விட்டதால், வழக்கை தொடர்ந்து நடத்த அவரது மகன் ககன் போத்ராவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது.

actor rajinikanth chennai high court

 

இந்த வழக்கு  நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (18/02/2021) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் எனக் கஸ்தூரிராஜா தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், பணத்தைத் திருப்பித் தருவது தொடர்பாக கஸ்தூரிராஜா எழுதிய கடிதம், நடிகர் ரஜினியை எப்படிக் கட்டுப்படுத்தும் என மனுதாரர் தரப்புக்குக் கேள்வி எழுப்பினர்.

 

பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் தீர்வுகாண வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இல்லாவிட்டால் வழக்கை விசாரித்து, தவறு செய்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர்.


இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய, அனைத்துத் தரப்பினருக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்