
46-வது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, மார்ச் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது. சென்னை ஆவடியை அடுத்த வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல்படை மூன்றாம் பட்டாலியனில் நடைபெற்ற இந்தப் போட்டியில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 900-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

60- க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பல்வேறு துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடைபெற்றன. சென்னை ரைஃபிள் கிளப், மதுரை ரைஃபிள் கிளப், கோயம்புத்தூர் ரைஃபிள் கிளப் உட்பட 50- க்கும் மேற்பட்ட கிளப்கள் இந்தப் போட்டிகளில் பங்கெடுத்தன. இந்தப் போட்டிகளில் பங்கேற்ற சென்னை ரைஃபிள் கிளப்பின் உறுப்பினரான நடிகர் அஜித்குமார் தங்கம், வெள்ளி உள்ளிட்ட 6 பதக்கங்களை வென்றார். அவருக்கு ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். மேலும், நடிகர் அஜித்குமார் பதக்கங்களைப் பெறும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக நடிகர் அஜித்குமாருக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச் சகோதரர் திரு.அஜித்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்". இவ்வாறு ஓ.பி.எஸ். குறிப்பிட்டுள்ளார்.