தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தமிழக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றை முடுக்கிவிட்டுள்ளது.
இருப்பினும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியதால் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸிலேயே சிகிச்சைப் பெறும் பரிதாபமான நிலையைக் காண முடிகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பேரிடர் காலத்தில் அளிக்கப்படும் நிதி, கரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் வேண்டுகோளை தொடர்ந்து, சிறுவர்கள் தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்தப் பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்துவருகின்றனர். அதேபோல், ஐ.டி. தொழிற்துறையினர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், நடிகர்கள், உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கரோனா நிவாரண நிதியை இணையதளம் மூலம் அனுப்பிவருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள அஜித்குமார், ரூபாய் 25 லட்சத்தை தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார். வங்கிப் பரிவர்த்தனை மூலம் நிவாரண நிதியை நடிகர் அஜித்குமார் அளித்துள்ளார்.
ஏற்கனவே, நடிகர் சிவக்குமார், அவரது மகன்கள் நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி ஆகியோர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடிக்கான காசோலையை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.