Skip to main content

“சசிகலாவுடன் தொலைப்பேசியில் யார் தொடர்பு வைத்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்”- திருச்சியில் அதிமுகவினர் தீர்மானம்!!

Published on 18/06/2021 | Edited on 18/06/2021
"Action will be taken against anyone who has any contact with Sasikala on the phone" - AIADMK resolution in Trichy

 

திருச்சி புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மூ.பரஞ்சோதி தலைமையேற்றார். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அ.இ.அ.தி.மு.க. முழுவதும் தகர்ந்து போய்விடும். இனி தமிழ் நாட்டில் குழப்பம் தான் மிஞ்சும் என்று எண்ணியவர்களுக்கு ஓர் சிறப்பான முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் ஆட்சியை நடத்தி தமிழ் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றவர் நம்முடைய கட்சியின் இருபெரும் தலைவர்கள்.

 

தி.மு.க.வின் சூழ்ச்சிகள் , தந்திரங்கள், சதிசெயல்கள் அனைத்தையும் முறியடித்து மக்களின் பேரண்பை பெற்று கழகத்தின் தலைமையிலான கூட்டணி 75 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. கழகத்தின் சார்பில் பிரதான எதிர்கட்சியாக 66 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று வலுவான ஓர் எதிர்க்கட்சியாக உள்ளது. இந்நிலையில் நம் உழைப்பை சுரண்டும் வகையில் சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினர் கழகத்தை வசப்படுத்திக் கொள்ளவும், அ.இ.அ.தி.மு.கவை அபகரித்து கொள்ள வஞ்சக வலையை விரித்து கொண்டுருக்கிறார்கள். மேலும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியலிருந்து ஒதுங்கி இருக்க போவதாக அறிவித்த சசிகலா இப்போது கழகம் வலிவும் , பொலிவும் கழக தொண்டர்களின் பெரும்பான்மையும் மக்களின் செல்வாக்கு பெற்று இருப்பதை பார்த்து அரசியலில் தன் குடும்பத்திற்கும் அரசியலில் முக்கியத்துவத்தையும், பாதுகாப்பையும் தேடி கொள்ள கழகத்தை அபகரிக்கும் முயற்சியில் இறங்க போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் தெரிவித்து வருகிறார். 

 

சிலருடன் பேசுவதும் அதை ஊர் அறிய தொலைக்காட்சியில் ஒளி பரப்புவதுமான , வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். சசிகலாவையோ அவருடைய குடும்பத்தையோ ஒருபோதும் திருச்சி புறநகர் மாவட்ட கழகம் சார்பில் அனுமதிக்கவோ ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம். சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் ஆக கூட முடியாது. சசிகலாவுடன் தொடர்பு வைத்திருந்தாலோ தொலைபேசியில் தொடர்பு கொண்டாலோ அதிமுக சட்ட திட்டங்களுக்கு மாறாகவும் இயக்கத்தின் லட்சியங்களுக்கு மாறாகவும் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவ்வாறு செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் தயவு தாட்சயமின்றி தலைமை கழகத்தின் மூலமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க திருச்சி புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக வலியுறுத்துகிறோம்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.