'Action should be taken without further delay'-Anbumani insists

தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து வரும் நிலையில் இன்று தமிழகம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தொடர்கதையாகி வரும் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ' வங்கக்கடலில் கச்சத்தீவுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை சிங்கள கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மீன் பிடிக்கச் சென்ற 2 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாரம்பரியமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை பன்னாட்டு விதிகள் அனுமதிக்கும் போதிலும், அந்த விதிகளை மீறி தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

Advertisment

தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்யும் நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த 10-ஆம் தேதி தான் வங்கக்கடலின் இரு பகுதிகளில் 22 தமிழக மீனவர்களும், 15-ஆம் தேதி 15 தமிழக மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். அதனால், அந்தப் பகுதிகளில் ஏற்பட்ட பதட்டமும், கவலையும் விலகுவதற்கு முன்பே மேலும் 21 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்.

'Action should be taken without further delay'-Anbumani insists

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 58 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். கடந்த இரு மாதங்களில் 80-க்கும் கூடுதலான மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும், கைது நடவடிக்கைகளும் முடிவில்லாமல் தொடர்வதை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழக மீனவர்களை கைது செய்யக்கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும். அதையும் மீறி சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்ந்தால் அவர்கள் மீது தூதரக அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Advertisment

மற்றொருபுறம் தமிழக மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இந்தியா - இலங்கை அரசுகள் இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 58 மீனவர்களை விடுதலை செய்யவும், தமிழக மீனவர்களின் அனைத்துப் படகுகளையும் மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.