Skip to main content

ஆக்ஷன் திரைப்பட நஷ்ட விவகாரம்; ரூ.8.29 கோடிக்கு உத்தரவாதம் அளிக்க நடிகர் விஷாலுக்கு உத்தரவு!

Published on 07/10/2020 | Edited on 08/10/2020

 

Action movie loss affair; Actor ordered to Vishal

 

ஆக்ஷன் படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், 8.29 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை நடிகர் விஷால் அளிக்க வேண்டும் என்றும், எந்த வகையில் உத்தரவாதம் அளிக்கப் போகிறார் என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால் - தமன்னா நடிப்பில் வெளியான 'ஆக்ஷன்' என்ற படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டால், 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித் தருவதாகக் கூறி, டிரைடெண்ட் நிறுவனத்தின் ரவீந்திரனுடன் நடிகர் விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால், ஆக்ஷன் படம் நஷ்டம் ஏற்படுத்திய நிலையில், வாக்குறுதியை நிறைவேற்றாமல், விஷால் இழுத்தடித்தாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, இயக்குனர் ஆனந்தன் என்பவர், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு ஒரு கதையைச் சொல்லி, அதைப் படமாக்க ஒப்பந்தம் செய்துள்ளார். தற்போது விஷால் நடிப்பில் "சக்ரா" என்ற படத்தை இயக்குனர் ஆனந்தன் இயக்கியுள்ளார். அது வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

தங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை, இயக்குனர் ஆனந்தன், நடிகர் விஷாலை வைத்து 'சக்ரா' என்ற பெயரில் படம் எடுத்துள்ளதாகவும், அந்தப் படத்தை ஓ.டி.டி-யில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதால், படத்தை வெளியிடத் தடை விதிக்கக்கோரி, ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுவில், ஏற்கனவே செய்த ஒப்பந்தப்படி, விஷால் தர வேண்டிய 8.3 கோடி ரூபாய் பணத்துக்கான உத்தரவாதத்தை வழங்கும்படி, விஷாலுக்கு உத்தரவிட வேண்டும். தங்கள் நிறுவனத்திடம் சொன்ன கதையை வைத்து வேறு நபருக்கு படமெடுக்க ஆனந்தனுக்கு தடைவிதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டும் என்றும், அதுவரை சக்ரா பட வியாபாரம் தொடர்பாக இறுதி முடிவெடுக்கக் கூடாது எனவும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷால் தரப்பில் வழக்கறிஞர் கிருஷ்ணா மற்றும் டிரைடெண்ட் நிறுவனம் தரப்பில் விஜயன் சுப்பிரமணியம் ஆகியோர் ஆஜராகி வாதம் வைத்தனர்.
 

Ad

 

வாதங்களைக் கேட்ட நீதிபதி, ஆக்ஷன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், 8.29 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை நடிகர் விஷால் அளிக்க வேண்டும் என்றும், எந்த வகையில் உத்தரவாதம் அளிக்கப் போகிறார் என்பது குறித்தும், அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை  வரும் அக்டோபர் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரத்னம் பட ப்ரமோஷன்; வீதி வீதியாக சென்று ஆதரவு கோரும் இயக்குநர் ஹரி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Director Hari goes from street to meet people for the promotion of Rathnam movie

நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இதயொட்டி அப்படத்தின் இயக்குநர் ஹரி இன்று வேலூர் விருதம்பட்டில் உள்ள திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தார் அப்போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வேலூர் எனக்கு சென்டிமென்ட்டான ஊர் இங்கிருந்து தான் திரைக்கதைகளை எழுதுவேன். எனக்கும் வேலூருக்குமான நெருக்கம் அதிகமாக உள்ளது. ரத்தினம் என்னுடைய 17 வது படம் நடிகர் விஷாலை வைத்து இயக்கும் மூன்றாவது படமாகும் இப்படம் வெற்றி பெறும். வழக்கமாக எனது படம் பல மாவட்டங்களை சார்ந்திருக்கும். வட மாவட்டங்களை மையகப்படுத்தி படம் ஒன்று இயக்க திட்டமிட்டேன்.

அதன்படி ஆந்திரா - தமிழக மாவட்ட எல்லையான வேலூர் மாவட்டத்தில் இப்படத்தை இயக்கி உள்ளேன். மாநில எல்லைகளின் பிரச்சினை இந்த படத்தில் காட்டி இருப்பேன். இளைஞர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் குடும்பப் பாங்காகவும் அமைந்துள்ளது. பழைய படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆவது மகிழ்ச்சி அளிக்கிறது. பழைய படத்திற்கு ஆதரவு அளிக்கும் போது எங்களை மென்மேலும் ஊக்குவிக்கிறது. மீண்டும் நாங்கள் தரமான படங்கள் இயக்குவதற்காக எங்களை பணி செய்ய வைக்கிறீர்கள்” என்றார்.

Director Hari goes from street to meet people for the promotion of Rathnam movie

ரத்னம் ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை இடம் பெற்றிருப்பது குறித்து கேட்டதற்கு, “படத்துக்கு தேவை என்பதால் மட்டுமே சில கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. இது படத்தின் தேவையை கருதியே பயன்படுத்துகிறோம். மேலும் பொது மக்களுக்கு மிக நெருக்கமாக ரியாலிட்டியுடன் எடுக்க வேண்டும் என்பதால் இத்தகைய போக்கை கடைபிடிக்கிறோம். எனது கடந்த படமான யானை படத்துக்கு இங்கு வந்திருந்தேன். படம் வெற்றி பெற்றது இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும். ரத்தினம் படம் தமிழகத்தில் 750 ஸ்கிரீன்களில் வெளியிடப்படுகிறது. மக்களுக்கு நல்லது செய்வதற்காக நடிகர்கள் சினிமாக்கு வருவது சந்தோசம் தான்.

என்னுடைய படங்களில் குடும்ப செண்டிமெண்ட் கட்டாயமாக இருக்கும். இதுவே நமது கலாச்சாரமாக எண்ணி அனைத்து படத்திலும் அதை வலுவாக வைத்துள்ளேன். கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அதை பார்க்கும்போது எனக்கும் ஆசையாக உள்ளது எனது படத்தையும் ரீலீஸ் செய்ய வேண்டும் என்று இதற்கு தயாரிப்பாளர் முடிவு செய்ய வேண்டும். மீண்டும் போலீஸ் கதையாம்சம் கொண்ட படத்தை இயக்க திட்டம் வைத்துள்ளேன்” என்றார்.

லோகேஷ் யுனிவர்ஸ் போன்று ஹரி யுனிவர்ஸ் வர வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு, “அது அவருடைய ஸ்டைல். எனக்கு அதுபோன்ற எண்ணம் இல்லை” என்று பதிலளித்தார்.

வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து பிரமோஷன் தேடுவது குறித்து கேட்டதற்கு, “தேர்தல் சமயத்தில் வேட்பாளர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று மக்களை சந்திக்கிறார்களே அதுபோலத்தான் நாங்களும் ஒரு படைப்பை உருவாக்கி அதனை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல இது போன்ற பிரமோஷனை நாடுகிறோம்” என்றார்.

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர்.