தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் பாலத்தில் விபத்து ஏற்பட்டிருக்கிறது.
தஞ்சை மாவட்டம், அணைக்கரையில் பாலத்தை இணைப்பதற்கான சிமெண்ட் ஸ்லாப் கொள்ளிடம் ஆற்றில் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலைக்காக ரூ.100 கோடியில் மேம்பாலப் பணி நடக்கும் நிலையில், பில்லர் மேல் இருந்த ஸ்லாப் இன்று அதிகாலை விழுந்ததுள்ளது. தஞ்சை-விழுப்புரம் விக்கிரவாண்டி இடையே ரூ.3,517 கோடியில் நான்கு வழிச்சாலை பணி நடந்துவருகிறது.
இதற்கான கட்டுமான பணிகள் கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்றுவருகின்றன. இதன் இறுதி பணி இந்த ஆண்டு முடியும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது சுமார் 200 அடி அளவில் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தஞ்சாவூர் - அரியலூர் ஆகிய பகுதிகளை இணைக்கக்கூடிய பகுதியின் 4 மற்றும் 5 ஆகிய பில்லர்களை இணைக்கக்கூடிய பகுதி தற்போது இடிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர். மேலும், தொழில்நுட்ப நிபுணர்களும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாலும் விபத்து அதிகாலை ஏற்பட்டதாலும், யாருக்கும் பாதிப்பும் சேதமும் ஏற்படவில்லை என அங்கு பணியில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.