ஆவின் பால் கலப்பட வழக்கிலிருந்து ஆவின் வைத்தியநாதன், அவரது மனைவி ரேவதி உள்ளிட்ட மூன்று பேரை சென்னை உயர் நீதிமன்றம் விடுவித்ததுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சென்னையில் உள்ள ஆவின் நிறுவனத்துக்கு டேங்கர் லாரியில் பால் கொண்டு வருவது வழக்கமான ஒன்றாகும். இவ்வாறு கொண்டுவரப்பட்ட பாலை திருடிக் கொண்டு, அதற்கு பதிலாக தண்ணீரை கலந்தது போலீசார் சோதனையின் போது தெரியவந்தது.
இதுதொடர்பாக, விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபட்டி போலீசார் கடந்த 2014 ல் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இவ்வழக்கு விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் கலப்பட பாலை கொண்டு சென்ற லாரி நிறுவன உரிமையாளரும் அப்போதைய அதிமுக மாவட்ட செயலாளரான வைத்திய நாதன் உள்ளிட்ட 28 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்ட தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கேட்டு, வைத்தியநாதன், அவரது மனைவி ரேவதி, அப்துல் ரஹீம் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இம்மூவர் தரப்பிலும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சி.டி. செல்வம் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். பிரதான மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, வழக்கில் இருந்து, மனுதாரர்கள் வைத்தியநாதன், ரேவதி, அப்துல் ரஹீம் ஆகிய மூவரையும் விடுவித்து உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில், " இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு எதிரிகளை விசாரணை நீதிமன்றம் விடுவித்துள்ளது. இவ்விருவரும், மனுதாரர்களிடம் வேலைப் பார்த்து வந்தவர்கள். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான், இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. ஆனால், அந்த இருவரும் வழக்கில் இருந்து விடுவித்த பின்னர், எப்படி இவ்வழக்கை தொடர்ந்து நடத்த முடியும். மேலும், ஆவின் பாலில் கலப்படம் செய்ததற்கான ஆதரமோ, திருட்டு நடந்ததற்கான ஆதாரமோ இல்லாத நிலையில், வழக்கை தொடரந்து விசாரணை நடத்துவது என்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயலாகும்" என்று நீதிபதி தெரிவித்தார்.