Skip to main content

9 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசா வாலிபர்கள் 2 பேர் கைது!

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

9 kg of cannabis seized; 2 Odisha youths arrested

 

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

 

சேலம் சூரமங்கலம் ரயில்நிலையத்தில் ரயில்வே காவல்துறை தனிப்படையினர் திங்கள்கிழமை (ஜூன் 27) அதிகாலை, தன்பாத் & ஆலப்புழா பயணிகள் விரைவு ரயிலில் ஏறி தீவிர சோதனை நடத்தினர். முன்பதிவு பெட்டியில் உள்ள குளியலறை அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் கிடந்த மூன்று பெரிய பைகளை எடுத்து சோதனை நடத்தினர். அதில், 9 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அந்தப் பைகளைக் கொண்டுவந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். 


அவர்கள் இருவரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கவுரங்க மாலிக் (22) மற்றும் சந்துபாலா ராணா (22) என்பது தெரியவந்தது. இவர்கள், சொந்த மாநிலத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு பயணச்சீட்டு எடுக்காமலேயே வந்ததும், திருப்பூரில் உள்ள ஒரு குளிர்பான கடையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. 


ஜூன் 21ம் தேதி, திருப்பூரில் இருந்து ஒடிசாவுக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்து 9 கிலோ கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர். இதேபோல் இவர்கள் கஞ்சா கடத்தி வந்து, சில்லறை விலையில் திருப்பூரில் விற்பனை செய்து வந்துள்ளனர். கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார். 

Next Story

தனியார் பல்கலைக்கழகம் எதிரே கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
cannabis chocolates seized from snack shop opposite private university.

வேலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழங்குவதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .

காட்பாடி டி.எஸ்.பி. சரவணன் உத்தரவின் பேரில், காட்பாடி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் (வி.ஐ.டி.) எதிரே உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு ஸ்நாக்ஸ் விற்பனை செய்யும் கடையில் சோதனை மேற்கொண்டனர். அந்த கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து 13 பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வைத்திருந்த 520 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குஞ்சன் குமார் கம்டி (21) , மனிஷ் குமார் கம்டி(21)  ஆகிய இருவரை காட்பாடி போலீசார் கைது செய்தனர். 

இந்தப் பகுதியில் இதுபோல் பல கடைகளிலும் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதும் அதை கல்லூரி மாணவ - மாணவிகள் வாங்கி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை காவல்துறை தொடர்ந்து ஆய்வு மூலம் பறிமுதல் செய்து அதனை விற்பனை செய்பவர்களும் அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.