கிரிக்கெட் உலகில் இன்று இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கான விதை போடப்பட்ட ஆண்டு 1983! அந்த ஆண்டுதான் இந்தியா முதல் முதலில் கிரிக்கெட் உலக கோப்பையை கபில்தேவ் தலைமையில் வென்றது. அந்த வரலாற்று நிகழ்வை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்துள்ளது 83 திரைப்படம்.
1983- ஆம் ஆண்டு இந்தியா உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றபோது வழக்கம்போல் லீக் சுற்றுகளோடு வெளியேறிவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த கணிப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கி இந்தியா எப்படி உலகக் கோப்பையை கையில் ஏந்தியது என்பதை அப்படியே கண்முன் நிறுத்தியுள்ளார் இயக்குனர் கபீர் கான். அந்த கால மைதானங்கள், அப்போது வாழ்ந்த ரசிகர்கள், அன்றைய கலாச்சாரம் என அத்தனை நிகழ்வுகளையும் சரியான கலவையில் கலந்து அதே சமயம் அழுத்தமான திரைக்கதையின் மூலம் ரசிக்கவும் வைதுள்ளார். 80ஸ், 90ஸ், 2கே என அத்தனை கிரிக்கெட் ரசிகர்களும் ரசிக்கும்படியான திரைக்கதையை திறன்பட கையாண்டு பாராட்டு பெற்றுள்ளார்.
குறிப்பாக, கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகளை அமைத்த விதமும், களத்துக்கு உள்ளேயும், களத்துக்கு வெளியேயும் நடந்த நிகழ்வுகளை நெகிழ்ச்சி கலந்து ரசிக்கும்படி அமைத்துள்ளதும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. அதேபோல் அந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதிய ஆட்டம் மட்டும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. கேமராமேன்களின் ஸ்டிரைக் காரணமாக அந்த போட்டியில் கபில்தேவ் அடித்த 175 ரன்கள் என்ற சாதனையை நேரில் பார்த்த ரசிகர்களை தவிர்த்து இதுவரை யாரும் பார்த்ததில்லை. அந்த ஏக்கத்தை இந்த படம் தனித்துள்ளது. அதேபோல் கிரிக்கெட் தவிர்த்து அந்த காலகட்டத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகளும், சச்சின் டெண்டுல்கர் சம்பந்தப்பட்ட காட்சியும் படத்துடன் ஒன்றி ரசிக்கும்படி அமைந்துள்ளது.
படத்தின் இன்னொரு ப்ளஸ் ஆக அமைந்துள்ளது கதாபாத்திர தேர்வு. அன்று விளையாடிய 11 பேருடனும் அப்படியே நாம் ரிலேட் செய்து கொள்ளும்படியான நடிகர்களை தேர்வு செய்து, அவர்களும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளது நாஸ்டால்ஜிக் நினைவுகளை தூண்டியுள்ளது. கபில்தேவ் ஆக நடித்திருக்கும் ரன்வீர்சிங் படம் முழுவதும் நம் கண்களுக்கு வெறும் கபில்தேவ் ஆக மட்டுமே தெரிகிறார். அந்த அளவுக்கு கதாபாத்திரத்துடன் ஒன்றி நடிப்பிலும் சரி, உடல் மொழியிலும் சரி அமர்க்களப்படுத்தி யுள்ளார். இவர் அந்த முன் பற்களைக் காட்டிக் கொண்டு பேசும் காட்சிகள் எல்லாம் அப்படியே கபில்தேவ் கண் முன் நிற்கிறார்.
தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் ஜீவா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்யும்படி சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். இவர் கண்ணை சிமிட்டி கொண்டு பேசும் காட்சிகளில் அப்படியே ஸ்ரீகாந்தை கண்முன் நிறுத்தி உள்ளார். அதேபோல் களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஸ்ரீகாந்த் உடல் மொழியை பக்காவாக பிடித்து சிறப்பாக நடித்துள்ளார்.
கபில் தேவின் மனைவியாக நடித்திருக்கும் தீபிகா படுகோன் சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதியும்படி நடித்துள்ளார். இவரது கதாபாத்திரம் படத்திற்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளராக நடித்திருக்கும் பங்கஜ் த்ரிபாதி நிறைவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி சென்றுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அன்று இருந்த பொருளாதார நிலைமையை இவரின் கதாப்பாத்திரம் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
மற்றபடி அணியில் விளையாடிய சுனில் கவாஸ்கர், ரவிசாஸ்திரி, பல்விந்தர் சிங் சாந்து, மதன்லால், மொகிந்தர் அமர்நாத், யஷ் பால் ஷர்மா, ரோஜர் பின்னி, சந்தீப் பாட்டீல், சயத் கிர்மானி கதாபாத்திரங்களுக்கு ஆளுக்கு ஒரு காட்சி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்களும் அந்த கதாபாத்திரமாகவே மாறி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தப் படத்தின் இன்னொரு மிகப்பெரிய பலம் படத்தின் மேக்கிங். ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து படத்தை பிரம்மாண்டமாக காட்டியுள்ளது. குறிப்பாக கிரிக்கெட் மைதான சம்பந்தப்பட்ட காட்சிகள், வீரர்களுக்குள் நடந்த உணர்ச்சிபூர்வமான காட்சிகள் ஆகியவைகள் சிறப்பாக வர ஒளிப்பதிவும், பின்னணி இசையும் சரியான பங்களிப்பை வழங்கியுள்ளது.
கிரிக்கெட் போட்டிகளை படமாக்கிய விதம், வீரர்களுக்குள் நடந்த நெகிழ்ச்சியான தருணங்கள் என படத்தில் ரசிப்பதற்கான பல விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. அதனாலேயே 83 திரைப்படம் தவிர்க்கமுடியாத திரைப்படமாக மாறியுள்ளது.