Published on 16/09/2018 | Edited on 16/09/2018

ஒருகட்டத்தில், கசாப்புக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு மனிதனுக்கு உணவாகும் கால்நடைதான் ஆடுகள். ஆனாலும், ஒரே நேரத்தில், ஒரே இடத்தில், 80-க்கும் மேற்பட்ட ஆடுகள், இயற்கைச் சீற்றத்தால் பலியானபோது, அந்தக் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
நேற்றிரவு, சிவகாசி மற்றும் சுற்றியிருக்கும் கிராமங்களில் பலத்த மழை பெய்தது. அப்போது, செங்கமல நாச்சியார்புரத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கண்ணன் கோவிலின் 100 அடி நீளம், 10 அடி உயரம் கொண்ட சுவர் இடிந்து விழுந்தது. அந்த இடிபாடுகளில் சிக்கி 80-க்கும் மேற்பட்ட ஆடுகள் உடல் நசுங்கி பலியாயின. ஜேசிபி இயந்திரத்தின் மூலம் சுவர் இடிபாடுகளை அகற்றி, இறந்த ஆடுகளைத் தூக்கினார்கள். இந்தப் பணியில் கால்நடைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டார்கள். இதுகுறித்து, திருத்தங்கல் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகிறார்கள்.