திருவள்ளூர் மாவட்டம் அருகே 2015 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தீண்டாமை சுவர் போலீசாரின் பாதுகாப்புடன் இன்று இடிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் ஆதம்பாக்கம் அருகே உள்ளது தோக்கமூர் கிராமம். இந்த பகுதியில் திரௌபதி அம்மன் ஆலயத்தின் அருகே 2015 ஆம் ஆண்டு மதில் சுவர் ஒன்று கட்டப்பட்டது. மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலரால் கட்டப்பட்ட இந்த சுவர் காரணமாக பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கால் கால்நடை மேய்க்க, கூலி தொழிலுக்கு செல்வது போன்றவைகளுக்கு குறிப்பிட்ட வழியாக செல்ல முடியாமல் இருப்பதாக புகார் எழுந்தது. இந்த தீண்டாமை சுவரை இடிக்க வேண்டும் என கடந்த 7 வருடங்களாக தொடர்ந்து கோரிக்கை கொடுக்கப்பட்டு வந்த நிலையில், சுவரை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் பாதுகாப்புடன் வந்த வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் தீண்டாமை சுவரை இடித்து அகற்றினர். அதனைத் தொடர்ந்து அருகே உள்ள திடலைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள முள்வேலியை அதிகாரிகள் அகற்றவில்லை என ஊர் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.