டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று (30/09/2022) மாலை 04.00 மணிக்கு நடைபெற்ற 2020- ஆம் ஆண்டிற்கான 68- வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, விருதுக்கு தேர்வானவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
அதன்படி, சூரரைப்போற்று படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. அதேபோல், சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்த நடிகை அபர்ணா முரளிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதைப் பெற்றார்.
சூரரைப்போற்று திரைப்படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. சூரரைப்போற்று திரைப்படத்தைத் தயாரித்த 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துக்கு சிறந்த படத்தைத் தயாரித்தற்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை நடிகை ஜோதிகா பெற்றுக் கொண்டார்.
பின்னர், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த நடிகர் சூர்யா, "விருது வழங்கிய இந்திய அரசுக்கும், தேசிய திரைப்பட விருது தேர்வுக் குழுவுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குடியரசுத் தலைவரிடம் விருது வாங்கியது மறக்க முடியாத நிகழ்வு. குறிப்பாக, சுதா கொங்கராவுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் பத்தாது. எனது கரியர்ல இது ரொம்ப ரொம்ப முக்கியமான படம். ரொம்ப நாளாக நான் வேண்டிக் கொண்டிருந்த படமாகக் கூட இதை நான் பார்க்கிறேன்.
எண்டயர் டீமுக்கும் நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். அவர்கள் ஒருத்தர் இல்லாமல் கூட, இந்த படம் இந்த அளவுக்கு ஸ்பெஷலாக இருந்திருக்காது. ஒரே ஆண்டில் ஐந்து விருதுகளைப் பெறுவது சாதாரண விஷயம் இல்லை. இந்த படமும் முதலில் கதையைப் படித்தது, பார்த்தது, ஜோதிகா தான். அவங்களுடைய மனசு இதில் இருந்தது. ஜோதிகா மேடைக்கு சென்று விருது வாங்கியது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. எனது ரசிகர்களுக்கும், உலக சினிமா ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நடிகர் சூர்யா விருது பெறும் போது, அவரது மனைவி நடிகை ஜோதிகா தனது செல்போனில் புகைப்படம் எடுத்தார். அதேபோல், தனது மனைவி ஜோதிகா விருது பெறும் போது, சூர்யா தனது செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது ஃ பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.