சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் தெருவில் நந்தகுமார் என்பவர் நகை பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த சூழலில் நகை பட்டறையில் கடந்த 27 ஆம் தேதி (27.11.2023) சுமார் 6.4 கிலோ அளவிற்கு உருக்கிய தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
இது குறித்து நகை பட்டறை உரிமையாளர் நந்தகுமார் சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிசிடிவி கேமராவில் பதிவுகளை ஆய்வு செய்தபோது, முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் உருக்கப்பட்ட நகையைத் திருடிச் செல்வது தெரியவந்தது.
மேலும் நகை பட்டறையில் பணிபுரிந்து வந்த 6 பேரிடம் சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் புனேவுக்கு விரைந்து சென்று இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கடை ஊழியர்கள் 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி கொள்ளையடிக்கப்பட்ட 6.4 கிலோ தங்கமும் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 6.4 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.