மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதே சமயம் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிவாரணத் தொகையை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் ஆகிய 3 வட்டங்களில் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்களில் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. அதாவது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, இரண்டு நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழந்த குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் 6 ஆயிரம் ரூபாய்க்கான டோக்கன்கள் வழங்கப்படும் என அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை வடக்கு மண்டலத்தில் ரூ. 6 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்க கூட்டுறவுத் துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 590 ரேசன் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் கூடுதல் பணியாளர்கள், வருவாய்த்துறை சார்பில் 2 பேர் என 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வெள்ள நிவாரணம் தருவது தொடர்பாக இந்த குழுவில் இடம்பெற்றுள்ள கூட்டுறவு பணியாளர்களுக்கு சென்னையில் (14/12/2023) பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சம்பந்தப்பட்ட உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலகங்களில் சரக கூட்டுறவு சார் பதிவாளர்களால் பயிற்சி தரப்பட உள்ளது.