கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த தியாகராஜன் மகன் இளையராஜா(45). தி.மு.க பிரமுகரான இவர் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற முன்னாள் மாவட்ட பொறுப்பாளராவார். மேலும் வள்ளலார் குடில் என்ற ஆதரவற்ற முதியோர், குழந்தைகள் இல்லத்தை நடத்தி வருவதுடன் இயற்கை விவசாயம் செய்து, அது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை, இளையராஜா நாளை(10 ஆம் தேதி) நடைபெற உள்ள இயற்கை விவசாயம் சார்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டிற்காக கொளஞ்சியப்பர் கோவில் அருகே உள்ள தனது சொந்த நிலத்தில் வேளாண் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். அது முடிந்து அதிகாரிகள் கிளம்பிச் சென்ற பிறகு மாலை 5.30 மணியளவில் தானும் கிளம்புவதற்காக காருக்கு அருகே வந்துள்ளார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்களைப் பார்த்ததும் இளையராஜா வேக வேகமாக காருக்குச் சென்று ஏற முயன்றார். அப்போது அந்த கும்பலில் இருந்த ஒருவர் இளையராஜாவை நோக்கி துப்பாக்கியால் சுட, அந்த குண்டு இளையராஜாவின் பின்பக்கமாக இடுப்பு பகுதியில் பாய்ந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட இளையராஜா, அங்கிருந்து தப்பிப்பதற்காக காரில் ஏறி, கதவைப் பூட்டிக்கொண்டு காரை இயக்க முற்பட்டபோது, அந்த கும்பலைச் சேர்ந்த மற்றொருவர் கைத்துப்பாக்கியால் காரின் முன்பக்க கண்ணாடி வழியாகச் சுடவே, அந்த குண்டு கார் கண்ணாடியைத் துளைத்தது. கண்ணாடிகள் உடைந்து அவரது கழுத்தில், மார்பில் படவே இரத்தம் பீரிட்டு வெளியேறியது. மேலும் அந்த கும்பல் இரண்டு முறை காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றது. இளையராஜாவும் வேக வேகமாக காரை ஓட்டிக்கொண்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் விருத்தாசலம் போலீசாருக்குத் தகவல் கிடைத்ததன் பேரில், அங்கு விரைந்து சென்ற டி.எஸ்.பி ஆரோக்யராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் இளையராஜா, “இயற்கை வேளாண்மை நிகழ்ச்சிக்காக வேளாண் அதிகாரிகளிடம் பேசிவிட்டு அவர்களை அனுப்பிவிட்டு நானும் வீட்டிற்கு புறப்பட தயாரானேன். அப்போது ஆடலரசன், புகழேந்தி உள்ளிட்ட 6 பேர் மூன்று பைக்கில் வந்தனர். ஆடலரசன் தனது இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தார். இதை பார்த்து நான் அருகில் இருந்த எனது காரில் ஏறி தப்பிக்க முயன்றேன். அதற்குள் புகழேந்தி துப்பாக்கியால் சுட்டார். ஆடலரசின் கையிலும் துப்பாக்கி இருந்தது. நான் காருக்குள்ளே சென்று கார் கதவை மூடியதும் என்னை நோக்கி ஓடி வந்த ஒருவர் கார் கண்ணாடி வழியாக மீண்டும் என் மீது துப்பாக்கியால் சுட்டார். இதனால் எனக்கு கழுத்து, தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதே கும்பல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கத்தி அரிவாளுடன் பொன்னேரி - சித்தலூர் பைபாஸில் வழிமறித்து தாக்கிக் கொலை செய்வதற்கு முயற்சித்தனர். இது குறித்து விருத்தாசலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை” எனத் தெரிவித்தார்.
இளையராஜா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் குறித்தும், அவர்களுக்குத் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்றும் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து மணவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகரின் மகனும் ஓ.பி.எஸ் அணியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளருமான புகழேந்தி, அவரது தம்பி ஆடலரசு மற்றும் அடையாளம் தெரியாத 4 பேர் மீது கொலை முயற்சி, உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடினர். மேலும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதனிடையே இன்று அதிகாலை கடலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜசேகரை பார்ப்பதற்காக அவரது மகன்கள் புகழேந்தி, ஆடலரசு ஆகியோர் வந்தபோது போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணைக்காக விருத்தாசலம் அடுத்த ஆலடி காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர்
விசாரணையில் புகழேந்தி மற்றும் ஆடலரசு ஆகியோருக்கும், இளையராஜாவுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. அதன் காரணமாக இளையராஜாவை கொலை செய்யும் நோக்கத்தில் 2 கள்ளத் துப்பாக்கிகளை வாங்கி வந்த புகழேந்தி, ஆடலரசன் மற்றும் இவர்களின் கூட்டாளிகள் பாளையங்கோட்டை விஜயகுமார், விருத்தாசலம் சரவணன், மதுரை சூர்யா, விருத்தாசலம் வெங்கடேசன் ஆகிய 6 பேரையும் விருத்தாசலம் அடுத்த ஆலடி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடமிருந்து 2 கள்ள கைத்துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.