
தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் வழங்கப்பட்ட 55,982 சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன.
போலி ஆவணங்கள் மூலம் பலரும் தமிழகத்தில் சிம் கார்டுகளைப் பயன்படுத்தி வருவதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் தமிழ்நாடு சைபர் க்ரைம் காவல்துறையினருக்கு வந்த வண்ணம் இருந்தன. இந்த விவகாரம் குறித்து தனது விசாரணையைத் துவங்கிய காவல்துறையினர், போலி ஆவணங்கள் கொடுத்து சிம் கார்டு பெற்றவர்களின் விவரங்களைத் தயாரித்து குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி அதை முடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.
குறிப்பாக 55,982 சிம் கார்டுகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற போலி சிம் கார்டுகளை விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் இதுவரை முடக்கிய சிம் கார்டுகளை விற்றவர்கள் குறித்து, சிம் கார்டுகளை விற்பனை செய்யும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையின் அடிப்படையில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை ஒன்றும் அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் பரிந்துரை ஒன்றைத் தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. போலி சிம் கார்டுகளை விற்பனை செய்யும் விற்பனை பிரதிநிதிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையிலும் சேகரிக்கப்பட்ட தகவலின் அடிப்படையிலும் சிம் கார்டுகளை விற்பனை செய்பவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டார்கள். தற்போது வரை இந்த விவகாரம் தொடர்பாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சைபர் க்ரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.