Skip to main content

கஞ்சா வியாபாரிகளின் 5.5 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்!

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

 5.5 crore assets of cannabis dealers frozen

 

கஞ்சா வியாபாரிகளின் 5.5 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி உள்ளதாக தமிழகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தின் காவல்துறை டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றதிலிருந்து சில அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாகத் தமிழகத்தில் உள்ள ரவுடிகள் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் வைத்திருந்த கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

 

அதனைத்தொடர்ந்து குட்கா, கஞ்சா விற்போரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறையினருக்குத் தமிழக டிஜிபி கடந்த மாதம் 23 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி குட்கா, கஞ்சா கடத்தல், பதுக்கல் சங்கிலியை ஒழிக்க 'ஆபரேசன் கஞ்சா 2.0' என்ற அந்த திட்டம் தொடங்கப்பட்டு அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கஞ்சா வியாபாரிகளின்  அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. 

 

இந்நிலையில், மதுரையில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காளை மற்றும் அவரது உறவினர் பெருமாயி ஆகியோருக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 5.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கம் செய்துள்ளதாக தென்மண்டல காவல்துறை தலைவர்  அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளதோடு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.