Skip to main content

அமெரிக்க பெண் மருத்துவரிடம் 5.25 கோடி ரூபாய் சொத்து மோசடி; தந்தையின் வளர்ப்பு மகன் உள்ளிட்ட மூவர் மீது புகார்!

 

5.25 Crore Property Fraud of US Woman Doctor; Complaint against three including father's adopted son!

 

அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற சேலத்தைச் சேர்ந்த பெண் மருத்துவரிடம், தந்தையின் வளர்ப்பு மகன் உள்ளிட்ட மூன்று பேர் 5.25 கோடி ரூபாய் சொத்துகளை போலி ஆவணம் மூலம் மோசடி செய்துள்ளனர். 

 

சேலத்தைச் சேர்ந்தவர் தேவிகா உத்ருசாமி (75). மருத்துவர். இவர் பல ஆண்டுக்கு முன்பாகவே அமெரிக்காவில் குடியுரிமை பெற்று நிரந்தரமாக தங்கிவிட்டார். எப்போதாவது திருவிழா மற்றும் உறவினர்களைப் பார்க்க சொந்த நாட்டுக்கு வந்து செல்வார். இந்நிலையில் தேவிகா உத்ருசாமி, சேலம் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். 

 

அதில் கூறியுள்ளதாவது: சேலம் ஓமலூர் முதன்மைச் சாலையில் எனது தந்தை ரங்கசாமி நாயுடுவுக்குச் சொந்தமான ஜவ்வரிசி ஆலை உள்ளது. நான் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறேன். என் தந்தை, ஜெயசீலன் என்பவரை தத்து எடுத்து வளர்த்து வந்தார். இதற்கிடையே, என் தந்தை மறைந்து விட்டார். இதையடுத்து என் தந்தையின் சொத்தில் எனக்கு பங்கு தருவதாக முடிவு செய்யப்பட்டது. மொத்த சொத்தில் எட்டில் ஒரு பகுதி எனக்கு கொடுக்க வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் உத்தரவு பெறப்பட்டுள்ளது. 

 

ஜவ்வரிசி ஆலை நிலத்தின் பேரில் முன்பணமாக 2 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறினர். ஆனால் கொடுக்கவில்லை. அதன்பிறகு, நிலத்திற்கான பவரை நாமக்கல் திருச்செங்கோட்டைச் சேர்ந்த சுமதி என்பவருக்கு எழுதிக் கொடுத்திருந்தேன். தற்போது அந்த நிலத்தை எனது தம்பி ஜெயசீலன், சகோதரி மலர்விழி, வழக்கறிஞர் ஒருவர் ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் 5.25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டனர். இது தொடர்பாக அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார். மேலும் தேவிகா உத்ருசாமி, இது தொடர்பாக சேலம் 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்றுள்ளார். 

 

இதையடுத்து, சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஜெயசீலன், மலர்விழி, வழக்கறிஞர் ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

 

இதை படிக்காம போயிடாதீங்க !