தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக குரூப் 4 பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 10,205 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் விழா இன்று (27.9.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 12 இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கி, பணி நியமன ஆணைகளை பெற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த விழாவில், அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மு.பெ. சாமிநாதன், அர. சக்கரபாணி, மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, முழு கூடுதல் பொறுப்புடன் கூடிய மனிதவள மேலாண்மைத் துறை செயலாளர் கே. நந்தகுமார், துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) தள பதிவில், “நாம் ஆட்சிக்கு வந்த இரண்டாண்டு காலத்தில், இதுவரை 22 ஆயிரம் அரசுப் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளோம். நடப்பாண்டில் மேலும் 17 ஆயிரம் பேரும், அடுத்த இரண்டாண்டுகளில் 50 ஆயிரம் பேரும் புதிதாகப் பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.
அரசு ஊழியர்களாக இன்று பணி நியமன ஆணை பெற்றவர்களுக்குத் தந்தையின் நிலையில் இருந்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு, அமைச்சர்கள், உயரதிகாரிகள் முதல் கடைநிலை அரசு ஊழியர் வரை அனைவருக்கும் ஒரு வேண்டுகோளையும் வைத்தேன். உங்களிடம் கோரிக்கை வைக்கவோ, மனு அளிக்கவோ வரும் பொதுமக்களின் சுயமரியாதையைக் காக்கும் வகையில் அவர்களை உட்கார வைத்து, அவர்களின் தேவையைக் காது கொடுத்துக் கேளுங்கள். அதுவே அவர்களின் பாதிக் கவலையைத் தீர்த்துவிடும். 'இது நமது அரசு' என்ற நம்பிக்கையை அவர்களுக்குத் தந்துவிடும்” என்று தெரிவித்துள்ளார்.