நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காவல் நிலையத்தின் எதிரே இருந்த புரட்சியாளர் அம்பேத்கர் உருவச்சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து பலஇடங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தற்போது அரக்கோணம் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு பகுஜன்சமாஜ் கட்சி, விடுதலைசிறுத்தை கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது பேசிய பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், முதலில் இதை வன்மையாக கண்டிக்கிறோம். அம்பேத்கர் சிலை உடைப்பு செய்த இடத்திலே வேறு சிலையை நிறுவியுள்ளனர். ஆனால் அதேபோல இந்த சம்பவத்தின் பின் புலத்தில் உள்ளார்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களின் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதுபோன்ற தொடர் சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் அறியாமையே, டாக்டர் அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியை யாருக்காக தூக்கி எறிந்துவிட்டு வெளியேறினார் என்று தெரிந்தால் அவர்கள் இப்படி செய்யமாட்டார்கள். உடைக்கப்பட்ட அம்பேத்கரின் சிலைக்கு பதிலாக வேறு சிலை வைத்துவிட்டார்கள். இந்த 50 ஆண்டு திராவிட கால ஆட்சியே இதற்கு காரணமாக உள்ளது என்றார்.