தஞ்சாவூரில் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னையைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார்.
சென்னையில் எழும்பூர் அடுத்த நேரு பார்க் அருகே உள்ள ஹவுசிங் போர்டில் வசித்து வரும் 18 பேர் ஒரு குழுவாக வேனில் கடந்த ஆறாம் தேதி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவில் தேர் பவனி விழாவிற்கு வந்திருந்தனர்.
தொடர்ந்து தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள மாதா கோவிலுக்கு பயணம் வந்தனர். பூண்டி அடுத்துள்ள மகிமைபுரம் என்ற இடத்தில் உணவு சமைப்பதற்காக வாகனத்தை நிறுத்திவிட்டு ஏற்பாடுகள் செய்துள்ளனர். அப்போது சார்லஸ் என்பவரின் மகன்கள் பிராங்கிளின், ஆண்ட்ரோ, நண்பர்கள் கிஷோர், கலையரசன், மனோகரன் ஆகிய ஐந்து பேரும் அருகில் இருந்த கொள்ளிடம் ஆற்றில் குளிக்க முயன்றுள்ளனர்.
அப்பொழுது நீரின் வேகம் காரணமாக 5 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் கலையரசன், கிஷோர் ஆகிய இருவரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மீதமுள்ள மூன்று பேரை மீட்புப் படையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில் தொடர்ச்சியான தேடுதலுக்கு பின் மூவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் மிகவும் குறிப்பிடத்தகுந்த விதமாக கடந்தாண்டு இதே மாதத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறு பேர் இதே இடத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் வேளாங்கண்ணி கோவிலுக்கு சுற்றுலா வந்திருந்தவர்களில் 5 பேர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் சென்னை எழும்பூரை சேர்ந்த 5 இளைஞர்கள் உயிரிழந்தது வேதனை தருவதாக இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர், உயிரிழந்த இளைஞர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.