நாகையில் விடுதி ஒன்றில் 5 வயது சிறுமி தலையணையால் அழுத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஆண் மந்திரவாதி, பெண், ஒரு கைக்குழந்தை உட்பட 3 பேர் விஜயவாடா அருகே ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை ஒன்றில் 5 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் சிசிடிவி கேமராவில் பதிவான சிசிடிவி காட்சிகளில் அதிக சிகை வைத்துக் கொண்ட ஆண் ஒருவர் தனது இடுப்பில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு நடந்துவர பின்னே ஒரு பெண் நடந்து வரும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
அதே விடுதியில் அவர்கள் தங்கி இருந்த அறையில் மூன்று நாட்கள் கடந்தபிறகு இவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனையடுத்து அந்த அறை திறக்கப்பட்டது. அறையில் 5 வயது சிறுமி தலையணையால் அழுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
மாந்திரீக சாமியார் கோபாலகிருஷ்ணன் தங்கும்விடுதியில் அளித்த ஆதார் அட்டையின் நகலை கொண்டு விடுதியில் கொலை செய்யப்பட்ட சிறுமி நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநர் தனசேகரனின் மூத்த மகள் என்பதை போலீசார் கண்டறிந்தனர். எதற்காக இந்த சிறுமி கொல்லப்பட்டார் சாமியாருக்கும் இந்த கொலைக்கும் என்ன சம்பந்தம் போன்றவற்றை துப்பு துலக்க போலீசார் விசாரணையை தொடங்கினர்.
ஆனால் இதற்கிடையில் மாந்திரீக சாமியார் கோபாலகிருஷ்ணன், கால்டாக்ஸி ஓட்டுனரின் மனைவி ஜெயந்தி மற்றும் அவர்கள் கையில் வைத்திருந்த மற்றொரு 3 வயது குழந்தை என மூவரும் விஜயவாடாவில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதற்காக கொலை செய்தனர். பின்னர் எதற்காக ஆந்திரா சென்றனர் அதன் பின்னர் ஏன் தற்கொலை செய்து கொண்டனர் என்ற மர்மம் புரியாத புதிராகவே போலீசாருக்கு இருந்தது தற்கொலை செய்துகொண்ட 3 பேரின் சடலங்களும் வேலூர் மாவட்டம் நெல்வாய் கிராமத்திற்கு அனுப்பப்பட்டது.
தற்கொலை செய்துகொண்ட தனது மனைவி ஜெயந்தி வெளியில் கூட அதிகம் செல்ல மாட்டார் அவருக்கு எப்படி வேளாங்கண்ணி வரை செல்ல துணிவு வந்தது என்று எனக்கே தெரியவில்லை. கோபாலகிருஷ்ணனின் வீட்டில் மலையாள மாந்திரீகம் பற்றிய புத்தகங்களும் மாந்திரீகம் செய்வதற்கான பொருட்களும் எப்பொழுதுமே இருக்கும். அவர் பெண்களை வசியம் செய்வது, பேய் ஓட்டுவது, சாமி ஆடுவது என பல மாந்திரீக செயல்களில் ஈடுபடுபவர் எனவே தனது மனைவியை அவர் வசியம் செய்து தான் கூட்டி சென்று இருக்க வேண்டும் என தற்கொலை செய்துகொண்ட பெண் ஜெயந்தியின் கணவர் தனசேகரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய தற்கொலை செய்துகொண்ட சாமியார் கோபாலகிருஷ்ணன் ஜெயந்திக்கு பெரிய மாமனார் முறை. இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தற்கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது. கால் டாக்ஸி ஓட்டுநரான தனசேகரன் இரவு பகல் பாராது வெளியூர்களுக்கு டாக்ஸி ஓட்டுநர் பணி புரிய செல்வதால் அவரது மனைவிக்கு உதவிகளை செய்ய மாந்திரீக சாமியார் கோபாலகிருஷ்ணன் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் ஜெயந்தியையும் மாந்திரீக சாமியார் கோபாலகிருஷ்ணனுக்கும் இடையே தவறான உறவு இருக்கின்றது என சந்தேகித்தனர். இதனையடுத்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயந்தியும், மாந்திரீக சாமியார் கோபாலகிருஷ்ணனும் நாகை வேளாங்கண்ணி சென்றுள்ளனர். அங்கு தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்த நிலையில் 5 வயது சிறுமி இடையூறாக இருப்பதாக எண்ணி தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்தனர்.
அதன் பின்பு அங்கிருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா சென்ற அவர்கள் சிறுமியை கொலை செய்ததால் எப்படியும் காவல்துறையிடம் மாட்டிக் கொள்வோம் என முடிவு செய்து மன உளைச்சலின் வெளிப்பாடாக ரயிலின் முன் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.