Skip to main content

‘47 லட்சத்து 14 ஆயிரத்து 148 வேலை வாய்ப்புகள்’ - முதலமைச்சர் பெருமிதம்

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

'47,14,148 job opportunities' - Chief Minister's boast

 

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 4.0 தொழில்நுட்ப மையங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 

 

இவ்விழாவில் பேசிய முதலமைச்சர், “இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகளவில் தொழிற்சாலைகள் இருக்கின்றன. வளர்ந்து வரும் புதிய துறைகளிலும் தமிழ்நாடு தான் முன்னணியில் இருக்கிறது. விண்வெளி மற்றும் பாதுகாப்பு, வேளாண்மை உணவுப் பாதுகாப்பு, மின்னணு வடிவமைப்பு, மருத்துவ மின்னணு சாதனங்கள் மற்றும் மின்சாரப் பொருட்களை உற்பத்தி செய்வதில் தமிழ்நாடு வளர்ச்சியைக் கண்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் மூலமாக உலகளாவிய வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றுகின்றன.

 

ஜனவரி 2022 முதல் மே 2023 வரை 110 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் 2 லட்சத்து 3 ஆயிரத்து 779 முதலீடுகள் பெறப்பட்டு 1 லட்சத்து 96 ஆயிரத்து 596 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த முதலீடுகள் தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் என நான் பெருமிதத்தோடு தெரிவிக்கிறேன். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பதிவு செய்துள்ள தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 79 ஆயிரத்து 613 ஆகவும் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 393 ஆகவும் இருந்தது.

 

திமுக அரசு பொறுப்பேற்ற பின் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டில் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 33 ஆயிரத்து 296 ஆகவும் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 47 லட்சத்து 14 ஆயிரத்து 148 ஆக உயர்ந்துள்ளது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்