இந்தியாவில் டெல்லி, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி, உத்தரப்பிரதேசம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பூசி போடும் பணிகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், பிரதமர் நரேந்திர மோடி, அவ்வப்போது மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் ஆகியோருடன் கரோனா தடுப்பூசிகள், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதேபோல் மத்திய உள்துறைச் செயலாளர், மத்திய அமைச்சரவையின் செயலாளர் உள்ளிட்டோரும் மாநில தலைமைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும், டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, வெண்டிலேட்டர் தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் ஆக்சிஜன் அதிகளவில் உற்பத்தியாகும் மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பும் பணியை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்தப் பணியில் இந்திய விமானப் படையின் விமானங்களும் ரயில்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஆக்சிஜன் டேங்கர்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவிற்கு விமானம் மூலம் அனுப்பி வருகின்றன. இதனை, அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்து அனுப்பி வருகிறது.
அந்த வகையில், இங்கிலாந்து நாட்டின் லண்டனிலிருந்து 46.6 லிட்டர் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் இன்று (04/05/2021) அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தன. லண்டனில் இருந்து எகிப்து வழியாக விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வந்து சேர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.