
ரயில்களில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சிதம்பரம் இருப்புப்பாதை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சிதம்பரம் இருப்புப் பாதை காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமையிலான காவல்துறையினர் விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயிலில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 26 வெள்ளை சாக்கு பையில் ரேஷன் அரிசி மூட்டைகள் பயணிகள் அமரும் இடத்திற்கு கீழே இருந்துள்ளது. இதுகுறித்து ரயில்வே இருப்புப் பாதை காவல் துறையினர் அரிசியை கைப்பற்றி யாருடையது என்று விசாரித்த போது யாரும் இதற்கு உரிமை கோரவில்லை.
இந்நிலையில் ரயிலில் இருந்த 26 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து சிதம்பரம் இருப்புப் பாதை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் மொத்தம் 420 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து காவல் ஆய்வாளர் அருண்குமார் ரயில்களில் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வரக்கூடாது. அதேபோல் ரேஷன் அரிசிகளை எடுத்து வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ரயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக இருப்புப்பாதை காவல் துறையினரை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். அவர்களின் தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என்றார்.