இலங்கையிலிருந்து கடல் வழியாகக் கடத்தி வரப்பட்ட 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து திருச்சி மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள் இராமேஸ்வரம் மாவட்டம் பாம்பன் அடுத்துள்ள முந்தல் முனை கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக ஒரு நாட்டுப்படகு வந்துள்ளது. இதனைக் கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அந்த படகை சுற்றி வளைத்து தீவிரமாகச் சோதனை செய்தனர். அதே சமயம் அந்த படகில் வந்த 4 பேரும் கடலில் குதித்து தப்பித்து ஓடிவிட்டனர். இதனையடுத்து படகில் 3.5 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில், இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்தும் கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 2 கோடியே 30 லட்சம் என சுங்கத்துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.