Skip to main content

58 ஆயிரம் விவசாயிகளுக்கு 333 கோடி ரூபாய் பயிர்க்கடன்! 

Published on 05/10/2022 | Edited on 05/10/2022

 

333 crore rupees crop loan for 58 thousand farmers!

 

சேலம் மாவட்டத்தில், நடப்பு ஆண்டில் இதுவரை 58 ஆயிரம் விவசாயிகளுக்கு 333 கோடி ரூபாய் பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புக் கடன் உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. 

 

சேலம் மாவட்டத்தில் 203 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், 5 'லேம்ப்' கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம், விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன்கள், கால்நடை பராமரிப்புக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை, 40,128 விவசாயிகளுக்கு 260.32 கோடி ரூபாய் பயிர்க்கடனும், 18,083 விவசாயிகளுக்கு 73.24 கோடி ரூபாய் கால்நடை பராமரிப்புக் கடனும் வழங்கப்பட்டு உள்ளன. அதாவது, மொத்தம் 58 ஆயிரத்து 211 விவசாயிகள், 333.56 கோடி ரூபாய் வரை வட்டியில்லா பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புக் கடன்களைப் பெற்று பயன் அடைந்துள்ளனர். 

 

கேசிசி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில், 1.60 லட்சமும், சொத்து பிணையத்தின்பேரில் 3 லட்சம் ரூபாய் வரையிலும் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. கறவை மாடு பராமரிப்பிற்காக மாடு ஒன்றுக்கு 14 ஆயிரமும், அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் உதவி வழங்கப்படுகிறது. உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு, கடனுக்கான வட்டியே அரசே ஏற்றுக் கொள்கிறது. 

 

அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தற்போது புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. அத்துடன் பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புக் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்ட விவசாயிகள் தங்களுடைய ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், நிலத்தின் கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக வி.ஏ.ஓ. அடங்கல் சான்று, புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி, கடன் சேவைகளைப் பெறலாம். 

 

உறுப்பினராக இல்லாத விவசாயிகள், அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் படிவத்தைப் பெற்று 110 ரூபாய் பங்குத்தொகை, நுழைவுக்கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து, அனைத்து வகையான கடனுதவிகளையும் பெற்று பயன் அடையலாம். உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத அனைத்து விவசாயிகளும் கூட்டுறவு சங்கங்களில் தேவையான உரங்களை பெற்றுக் கொள்ள முடியும். 

 

மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், குறைந்த வட்டியில் சுய உதவிக்குழு கடன், நகைக்கடன், மத்திய காலக்கடன், பண்ணைசாராக் கடன், விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு குறைந்த வட்டியில் கடன், பெண் தொழில்முனைவோர் கடன், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் கடன் உள்ளிட்ட 17 வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சேவைகளை விவசாயிகள், உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி, கூட்டுறவு கடன் சங்க சேவைகளைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

 

சேவை குறைபாடுகள் இருப்பின், சேலம் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் - 0427 2415158, சரக துணைப்பதிவாளர் அலுவலகங்களான சேலம் - 0427 2452011, ஆத்தூர் - 04282 24060, ஓமலூர் - 04290 222959, சங்ககிரி - 04283 243600 ஆகிய அலுவலக எண்களில் தொடர்பு கொண்டு தீர்வு பெறலாம். இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்