கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரயில் நிலைய சந்திப்பினை கடந்து கடலூர், சேலம், சென்னை, திருச்சி உள்ளிட்ட வழித்தடங்களில் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு ரயில்கள் இயங்குகின்றன. அவ்வாறு அமைக்கப்பட்ட ரயில்வே இருப்பு பாதைகள் கிராமங்கள் வழியாகச் செல்லும்போது போக்குவரத்துக்காக, ரயில்வே பாதையின் கீழ் சென்னை - திருச்சியின் இருப்பு பாதையில் செம்பளக்குறிச்சி வழித்தடத்திலும், சேலம் இருப்பு பாதையில் சின்னவடவாடி வழித்தடத்திலும், கடலூர் இருப்பு பாதையில் குப்பநத்தம் வழித்தடத்திலும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டு கடந்த 7 ஆண்டுகளாக மழைக்காலங்களின் போது சுரங்கப்பாதை முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கிவிடுகிறது. இந்தச் சுரங்கப் பாதைகளைக் கடந்து செல்லும் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பொழிந்து வரும் கன மழையினால் மூன்று சுரங்கப் பாதைகளும் முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கியுள்ளன. இப்பாதை தொடங்கப்பட்ட நாள் முதல் கோடைக்காலம் மற்றும் மழைக்காலம் என அனைத்துப் பருவ காலங்களிலும் நீரூற்றாலும், மழைநீராலும் முழுவதுமாக நிரம்பி, குளம்போல் உள்ளது. இதனால் சுரங்கப்பாதைகளைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுரங்க பாதை வழியாக வெளியே செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
மேலும் விவசாய விளைபொருட்களை வெளியே கொண்டு செல்ல முடியாமலும், அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமலும், அவசரமான காலக்கட்டத்தில் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல முடியாமலும் சிரமப்படுவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, ரயில்வே நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் தற்போது வரை தண்ணீரை நிரந்தரமாக அகற்றுவதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், 30, 40 கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு நகரப்பகுதிக்குச் செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் எதற்கும் பயன்படாத ரயில்வே சுரங்கப் பாதைக்கு சின்னவடவாடி மற்றும் எருமனூர் பொதுமக்கள் மாலை அணிவித்து, கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து, மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.
7 ஆண்டுகளாக எதற்கும் பயன்படாத சுரங்கப்பாதை உயிரிழந்து விட்டதாகவும், உயிரிழுந்த சுரங்கப்பாதை தேவையில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து மழைநீரை அகற்றாவிட்டால் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.