சில மாதங்களுக்கு முன்பு பவானி காவல்நிலையத்தில் பணியாற்றிய எஸ்.ஐ.கோபாலகிருஷ்ணன் மற்றும் சிறுவலூர் காவல் நிலைய எஸ்.ஐ.யாக இருந்த ஜேம்ஸ்ராபட் ஆகிய இருவரும் தனி தனி விபத்துக்களில் இறந்து விட்டனர். இந்த இரண்டு குடும்பங்களையும் இன்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு அழைத்து வந்து எஸ்.பி. சக்தி கணேசன் முன்னிலையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஐ.ஜி.பெரியய்யா தலா முப்பது லட்ச ரூபாய் காசோலை வழங்கினார்.
குடும்பத் தலைவனை இழந்த அந்த குடும்பங்கள் முப்பது லட்சம் மூலம் வாழ்வில் மிகப் பெரிய நம்பிக்கை ஏற்பட்டு வீடு திரும்பியது. எப்படி வந்தது இந்த முப்பது லட்சம் என காவல்துறை அதிகாரிகளிடம் நாம் கேட்டபோது " இங்கு மட்டுமல்ல எல்லா மாவட்ட போலீசாருக்கும் பாரத ஸ்டேட் வங்கியில் காவலர் குழு இன்சூரன்ஸ் உள்ளது. அந்த இன்சூரன்ஸ் குழுவில் உள்ள போலீஸார் விபத்தில் இறந்து விட்டால், அவர்கள் குடும்பத்திற்கு எஸ்.பி.ஐ. வங்கி முப்பது லட்சம் வழங்கும்.
அந்த நடைமுறைப்படி தான் இறந்து போன ஈரோடு போலீஸாரின் குடும்பங்களுக்கு இன்று தொகை வழங்கப்பட்டது. இந்த தொகையை பெறுவது மிகவும் சிரமம். பல மாவட்டங்களில் உரியவர்களுக்கு வருடக் கணக்காகியும் பணம் பெற முடியவில்லை. ஈரோடு எஸ்.பி. சக்தி கணேசன் வங்கி அதிகாரிகளை பலமுறை சந்தித்து கொடுக்க வேண்டிய டாக்குமென்ட்டுகள் அனைத்தையும் விரைவாக சேகரித்து கொடுத்து காலம் தாழாமல் அந்த குடும்பங்களுக்கு நிதியை பெற்றுத் தந்துள்ளார்" என்றனர்.