தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு நீர்நிலைப் பகுதிகள் நிரம்பிக் காணப்படுகின்றன. ஆனால் சில பகுதிகளில் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் நீர்நிலைகளில் ஆபத்தான நிலையில் நின்று கொண்டு செல்பி எடுப்பது, ரீல்ஸ் எடுப்பது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலையில் ஆற்றில் விளையாண்ட மூன்று வயது சிறுவன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்துள்ள கொட்டாவூர் செய்யாறு கரையோரம் சஞ்சீவ் என்பவர் விளை நிலம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். உடன் மகன் திருச்செல்வனை (3) அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது ஆற்றங்கரை அருகே சென்ற திருச்செல்வன் நீரில் இறங்கி விளையாடியதாக கூறப்படுகிறது. திடீரென சிறுவன் காணாமல் போனான். நீண்ட நேரமாகியும் சிறுவன் கிடைக்காததால் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சிறுவன் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்பதன் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர் ஆற்றில் இறங்கி தீவிரத் தேடுதலில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேர தேடலுக்கு பின் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.