2024 புத்தாண்டு கழிக்கும் வகையில் வேலூர் கோட்டையில் ஏராளமான பொதுமக்கள் புத்தாண்டைக் கொண்டாடினர். நேற்று அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தோடு வந்து சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளும் தொடர்ந்து வந்ததால், கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அந்த வகையில் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடும் விதமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் வேலூர் கோட்டை களைகட்டியது.
அதே சமயம், புத்தாண்டையொட்டி மாவட்டம் முழுவதும் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கடந்த ஞாயிற்றுகிழமை இரவு வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டன. அப்போது, வேலூர் சரகத்தில் 112 வழக்குகளும், காட்பாடி சரகத்தில் 138 வழக்குகளும் மற்றும் குடியாத்தம் சரகத்தில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 267 வழக்குகள் பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் 104 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.