2,500 crore worth of charitable assets recovered in 10 months! - Minister Sekar Babu

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அறநிலையத் துறைக்கு சொந்தமான மங்களப்பபுள்ளி லெட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில் ஆகியவைகள் கும்பாபிஷேகம் செய்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குமேல் ஆகிறது. இதனைத்தொடர்ந்து கோவில்களில் கும்பாபிஷேகம் மற்றும் பராமரிப்பு பணிகள் செய்வது தொடர்பாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வுப் பணிகள் மேற்கொண்டார்.

Advertisment

அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, “தமிழகத்தில் அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களில் 12 வருடங்களுக்கு மேலான கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கும் பராமரிப்பு பணிகள் செய்வதற்கும் என ரூ. 100 கோடி நிதி நடப்பு நிதி ஆண்டில் தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார்.

Advertisment

அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்கள் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வரையறுக்கப்பட்டு அத்துமால் கல் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பல நூற்றாண்டுகள் பழமையான கோவில்களில் பதிவேடுகள் 4 கோடி பக்கங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளது. பழனியில் இரண்டு வருடங்களுக்குள் புதிதாக இரண்டாவது புதிய ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்படும். திமுக ஆட்சிக்கு வந்து 10 மாத காலங்களில் ரூ 2,500 கோடி மதிப்புள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலங்கள் மீட்டு தமிழக அரசு சாதனை படைத்துள்ளது.

தமிழக கோவில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட சாமி சிலைகள் இதுவரை 872 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளது. மேலும் தற்பொழுது வெளி நாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 4 சிலைகள் டெல்லியில் வைக்கப்பட்டு உள்ளது. அவை விரைவில் தமிழகம் கொண்டு வரப்படவுள்ளது. மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தையும் எப்படி பாதுகாப்பது என்பது குறித்து தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார்.

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில்களில் அன்னைத் தமிழ் அர்ச்சனை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பல கோவில்களில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தப்படும் தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள் தனியாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இறை சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள் அனைவருக்கும் சமம். தனியார் கட்டுப்பாட்டில் செயல்பட அனுமதிக்க முடியாது” என்று கூறினார்.