25 VKC arrested for attempting blockade Highways Department office

சிதம்பரத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி சிதம்பரம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் நகராட்சி துறையினர் அரசியல் கட்சிக் கொடி கம்பங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு பேட்டை பகுதிலிருந்த விடுதலை சிறுத்தை கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றினார். அப்பொழுது கொடிக்கம்பம் அருகே இருந்த டாக்டர் அம்பேத்கர் சிலை மீது எதிர்பாராத விதமாக கொடி கம்பம் விழுந்தது. இதில் அம்பேத்கர் சிலை சேதம் அடைந்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து அன்றிரவு விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் பாஜகவினர் சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்குச் சென்ற சிதம்பர நகர போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை சார்பில் அதே இடத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைத்துத் தர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சிதம்பரம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரை கண்டித்து அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். இதையடுத்து, செவ்வாய்க் கிழமை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் அரங்க தமிழ் ஒளி தலைமையில் அக்கட்சியினர் சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் சீர்காழி சாலையில் ஊர்வலமாக நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர்.

போலீசார் வழியிலேயே அவர்களை தடுத்து நிறுத்தினார். இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உதவி கோட்ட பொறியாளர் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். இதில் 25க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டத்தை முன்னிட்டு ஏ டி எஸ் பி கோடீஸ்வரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.