Skip to main content

மாநகராட்சி குடிநீரை குடித்து 25 பேருக்கு வாந்தி வயிற்றுபோக்கு!

Published on 04/07/2020 | Edited on 04/07/2020

 

தஞ்சாவூர் மாநகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீரை குடித்த 25க்கும் அதிகமானோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட அந்த பகுதியே நடுங்கிக்கிடக்கிறது.

தஞ்சாவூர் தொல்காப்பியர் நகரில் உள்ள நான்கு மற்றும் ஐந்தாம் தெருவில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த குடியிருப்புகளுக்கு மாநகராட்சியே குடிநீர் வழங்கி வருகிறது. அந்த தண்ணீர் சில நாள்களாகக் கலங்கலாக, சாக்கடை கலந்த நிலையில் வந்திருக்கிறது. இதுகுறித்து அப்பகுதியினர் மாநகராட்சிக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். ஆனால் மாநகராட்சி ஊழியர்களோ கரோனா பணிகளை காரணம் காட்டி அலட்சியபடுத்திவிட்டனர்.

அதன் விளைவு இன்று சனிக்கிழமை காலை தெருவில் உள்ள குழாயடியில் வழக்கம்போல அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடித்து குடிநீருக்கு பயன்படுத்திய 16 பெண்கள் உட்பட 25 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. தகவலறிந்த மாநகராட்சி அலுவலர்கள் அந்த ஏரியாவிற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை மகர்நோன்புசாவடி தாய் சேய் நல விடுதியில் சிகிச்சைக்காக அனுப்பினர், அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் சுகாதாரப் பிரிவினர் முகாம் அமைத்து, அப்பகுதி மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, மாத்திரைகள் வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "புதிதாக பாதாளசாக்கடை இணைப்பு வழங்கும்போது குடிநீர் குழாயை சேதப்படுத்திட்டாங்க, அன்று முதலே அந்த உடைசல் வழியாகக் குடிநீரில், கழிவு நீர் கலந்துவர துவங்கிடுச்சி. இது சம்மந்தமா பலமுறை மாநகராட்சியில் கூறிவிட்டோம், மக்கள் பாதிக்கப்பட்ட பின்னாடிதான் ஓடிவராங்க" என்கிறார்கள். இதையடுத்து, கழிவுநீர் கலக்கும் இடத்தில் சீரமைக்கும் பணியை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
The cruelty that happened to the woman who went to herd the goats; Villagers frozen in fear

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

கோவையில் பயங்கர தீ விபத்து!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Coimbatore Corporation Vellalur fire incident

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பல லட்சக்கணக்கான குப்பைகள் சேகரிக்கப்பட்டு மலைபோல் குவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் நேற்று மாலை திடீரென யாரும் எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் தீப்பற்றி எரிவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 20 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

அதே சமயம் ஹிட்டாட்சி மற்றும் பொக்லைன் வாகனங்கள் மூலம் குப்பைகள் நகர்த்தப்பட்டும் மற்ற இடங்களுக்கும் தீ பரவாமலும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மேலும் விமானப்படையில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரப் பணியாளர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இரண்டு டிரோன்கள் மூலம் தீப்பற்றி எரியும் இடங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தீ விபத்து சம்பவத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.